செவ்வாய் தோஷம் போக்கும் வழிபாடு

 🌠 செவ்வாய்க்கு பூமி காரகன் என்ற பெயரும் உண்டு. அவன் குழந்தையாக இருக்கும் போது பூமிதேவி எடுத்து வளர்த்த காரணத்தால் இந்தப் பெயர் உண்டாயிற்று. திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கின்ற போது அது செவ்வாய் ஜாதகமா? என்று சிலர் பார்ப்பர்.

🌠 ஒரு பெண்ணிற்கோ அல்லது ஆணிற்கோ அவர்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றால், அவர்களுக்கு பார்ப்பவர்களும் அதே போல் இருக்க வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள நியதியாகும்.

🌠 செவ்வாய் கிரகம், வரம் பெறுவதற்காக ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். விநாயகப் பெருமான் செவ்வாய் கிரகம் முன் தோன்றி அவனை நவக்கிரகங்களுள் ஒருவனாகவும் ராசி வீடுகளில் மேஷம், விருச்சிகம் இரண்டின் அதிபராகவும் செய்தார்.

🌠 செவ்வாய்கிழமை சதுர்த்தி திதியில் விநாயகர் காட்சி அளித்தார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வளர்பிறை தேய்பிறை எதுவானாலும் செவ்வாய்கிழமைகளில் வந்தால் அன்று விரதம் இருந்து விநாயகரை பூஜித்தால் தோஷம் நீங்கும்.

🌠 மேலும் விநாயகருடைய சகோதரரான முருகப் பெருமானின் அம்சமாகவும் கருதி மக்கள் அனைவரும் செவ்வாயை வணங்கி வருகிறார்கள். அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சி அளித்த நாள் என்பதால் செவ்வாய்கிழமையை மங்கள வாரம் என்று அழைப்பார்கள். அங்காரகனுக்கு மங்களன் என்ற பெயரும் உண்டு.

🌠 செவ்வாய்க்குரிய தெய்வம் முருகப்பெருமான் மற்றும் சக்தி என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்லப்படுகிறது. எனவே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அச்சமின்றி வாழ முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். தோஷம் விலகி யோகம் சேரும்.

🌠 அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி பழம் பெருமைகளை உடையது. தமிழ் கடவுள் முருகப்பெருமான் இங்கு தண்டாயுதபாணி கோலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ளார். பழனி செவ்வாய் ஆதிக்கம் பெற்ற தலமாகும். இதனால் செவ்வாய் கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு நிவர்த்தி பெறுகிறார்கள்.

🌠 அதற்குரிய விதத்தில் புரட்டாசி மாதம் நவராத்திரி விழா நடைபெறும் ஒன்பது நாட்களும் சக்தி வழிபாட்டினை மேற்கொண்டு, அதன்பிறகு வரும் கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இடையில் வரும் ஐப்பசியில் கந்தசஷ்டி விழாவினையும் கண்டுமகிழ்ந்து, விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வர வேண்டும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகைத் திருவிழாவும் வருகின்றது. அந்த நாளிலும் தீபமேற்றி முருகப்பெருமானை வழிபட வேண்டும். இப்படி முப்பெரும் வழிபாட்டை மேற்கொண்டால் அற்புத வாழ்வமையும்.

🌠 மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வு செய்து அதிலிருந்து தண்டாயுதபாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர். தண்டாயுதபாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவகோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு தொழில்நுட்பம் ஆகும்.

🌠 தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் தலமாக பழனி திகழ்கிறது. இதனால் பழனி தினமும் திருவிழாக் கோலம் போல் இருக்கும். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர திருவிழா மிக முக்கியமானதாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் பல்வேறு வகை காவடிகள் எடுத்து பாத யாத்திரையாக வந்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். தண்டாயுதபாணி மேற்கு நோக்கி இருப்பதால் கேரள பக்தர்கள் மிக அதிகளவில் வருகின்றனர். இதனால் இக்கோவில் வருமானத்தில் முதலிடம் பெற்று திகழ்கிறது.