அன்புமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி

 தருமபுரியில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி திடீர் உடல்நலக் குறைவால் நிகழ்ச்சிகளை பாதியில் ரத்து செய்தார்.

அவருக்கு தற்போது பெங்களூரு நாராயண ஹிருதாலயா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டி, அரூர், பென்னாகரம், ஏரியூர் உள்ளிட்ட 10 இடங்களில் நேற்று பாமக-வினரின் இல்ல திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அன்புமணி நேற்று தருமபுரி வந்தார். காலையில் பாப்பி ரெட்டிப்பட்டி பகுதியில் தொடங்கி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் மதியம் 3 மணியளவில் பென்னாகரம் பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கு, மதிய உணவை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அப்போது அவருடன் பயணத்தில் இருந்த மருத்துவரும், தருமபுரி நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினருமான செந்தில் மூலம் பரிசோதனை செய்துள்ளார். தொடர்ந்து தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல்சிகிச்சைக்காக அன்புமணி சென்றார். சுமார் 1 மணி நேரம் அங்கு முதலுதவி சிகிச்சைகளை பெற்ற பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரி கிறது.

பெங்களூரில் சிகிச்சை

இந்நிலையில் பெங்களூரில் உள்ள நாராயணா ஹிருதாலயா மருத் துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டதாக பாமகவினர் தெரிவித்தனர். இந்த தகவலால் தருமபுரியில் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.

லேசான மாரடைப்பு:

இதற்கிடையில், அன்புமணிக்கு சிகிச்சை அளித்துவரும் பெங்களூரு நாராயணா ஹிருதாலயா மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, "அன்புமணி ராமதாஸுக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அளிக்கப்பட வேண்டிய மேற் சிகிச்சை குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். தற்போதைக்கு அவரது உடல்நிலை சீராக இருக்கிறது" எனத் தெரிவித்தனர்.