நாட்டிலே நரிகள் நடமாடுதுங்க....வசனம்: கலைஞர்;  எடிட்டிங்:  இராச  கார்த்திக்இந்த அரசியல் விசித்திரம் நிறைந்த பல கட்சிகளை சந்தித்து இருக்கிறது -  புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது - ஆகவே நானும் விசித்திரமல்ல,  அரசியல் பேசும்  நான் புதுமையான மனுசியுமல்ல -வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்...


அம்மாவை சாகடித்தேன் ;  அதிமுகவை கைப்பற்றினேன் - பன்னீரின் பதவியை பறித்தேன் ;  பட்டத்தோடு பதவியையும்    அடைந்தேன்!  குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம் - நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் ; நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று  - இல்லை நிச்சயமாக இல்லை!  அரசியலில்  குழப்பம் விளைவித்தேன் -  அரசியல்  கூடாது என்பதற்காக அல்ல; அரசியல் அடுத்தவர்களிடம் இருக்கக்கூடாது என்பதற்காக!  மக்களை ஏமாற்றினேன் - மக்கள் என்பதற்காக அல்ல - மகராசியின் தோழி என்பதினால்!..

உனக்கேன் இவ்வளவு அக்கறை ? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை? என்று கேட்பீர்கள் -  நானே  பாதிக்கப்பட்டேன்.... சுயநலம் என்பீர்கள்... என் சுயநலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது.... ஆம் ; எடுத்ததை எல்லோருக்கும்  பிரித்தல்லவா கொடுத்தேன் // ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல அரசியலை சுத்தப்படுத்த என்று சொல்ல மாட்டேன் - அப்படி சுத்தமானால் நான் எப்படி பிழைப்பது ?

என்னைக் குற்றவாளி,  குற்றவாளி என்கிறார்களே? இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவள் கடந்து வந்துள்ள கதையை  காணலாம் - வீடியோ கடையிலிருந்து வீதிவழியாய் போயஸ் வந்தேன் ! விதி என்னை இங்கேயே நிரந்தரமாக்கியது... வளர்த்த  கடாவாய் மார்பிலே முட்டியிருக்கிறேன் -- பாசம்கொண்டு என்னை வளர்த்தவரை  படுகுழியில் தள்ளியிருக்கிறேன் -  கேளுங்கள் என் கதையை!  கணம் கோர்ட்டார்  அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்...

தமிழ்நாட்டிலே  பிறந்தவள் நான்- மன்னார்குடியில் பிறந்தாலும் தமிழின  தலைவர் கலைஞர் கரங்களிலே எடுத்து தரப்பட்ட தாலியை அணிந்தவள் நான்!  அன்றைய ஆட்சியர் சந்திரலேகா என்னையும் என் அக்காவிற்கு அறிமுகம் செய்ய அவரும் என்னை மதித்து  உயர்ந்த இடத்தில் வைத்தார் - பகட்டு வாழ்கை வாழ்ந்தேன் - பறந்தேன் - பட்டு போனேன் ~ ஆம் ; ஒரு ரூபாயில் அவள் வாங்கிய சம்பளம் என்னையும் சேர்த்தே சிறைக்கு தள்ளியது.. 

சிலர் எனக்கு  கருணை காட்ட முன்வந்தார்கள்... பிரதி உபகாரமாக சில வேலைகளை செய்ய சொன்னார்கள் -  உலக உத்தமர் காந்தி நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார் ;  அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல்!  இது எப்படி குற்றமாகும்?  பயம் என்னை மிரட்டியது; வழக்கு என்னை வாட்டியது!  காட்சிகள் அரங்கேற பட்டத்தோடு பதவியையும் வைத்து கொள்ளப்போகிறேன்... இனி நான் தனி மனுஷி அல்ல ; தமிழகத்தின் தலைவி!

 என் விதியை மாற்றி எழுதும்முன் இதோ தமிழகத்தின் தலைவிதியை மாற்றியிருக்கிறேன்!  இது விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் கொடுக்கும் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்?  பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா?  வழக்கையும் பார்ப்பேன்; வாழ்க்கையையும் ஜெயிப்பேன்...ஹா ஹா