செல்போன் மூலம் ரூ.3,700 கோடி மோசடி; என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது

 நொய்டா,

டெல்லி அருகே செல்போன் மூலம் ரூ.3,700 கோடி மோசடி செய்த என்ஜினீயர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் சுமார் 6½ லட்சம் பேர் பணம் கட்டி ஏமாந்துள்ளனர்.

பணமோசடி அதிகமாக நடப்பது நிதிநிறுவனங்களில்தான் என்று கூறுவார்கள். அதையும் மிஞ்சும் விதமான இந்த மோசடி காலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப செல்போன், இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் புகுந்துவிட்டது.

அதுபோன்ற நூதன மோசடிதான் இது.

ரூ.3,700 கோடி 

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ரூ.3,700 கோடி மோசடி செய்த வழக்கில் 26 வயது அனுபவ் மிட்டல் என்ற என்ஜினீயர் உள்பட 3 பேரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் சில மாத தேடுதல் வேட்டைக்கு பின்பு அண்மையில் கைது செய்தனர்.

அனுபவ் மிட்டலும், அவருடைய உதவியாளர்கள் ஸ்ரீதர் பிரசாத் (40), மகேஷ் தயால்(25) ஆகியோரும் செல்போன் வழியாக சுமார் 6½ லட்சம் சந்தாதாரர்களிடம் இந்த தொகையை மோசடி செய்துள்ளனர். இவர்களில் ஸ்ரீதர் பிரசாத் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார்.

இவர்களின் மோசடி குறித்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் விசாரணை நடத்தியபோது குறுகிய காலத்துக்குள் நூதன முறையில் சில ஆயிரம் கோடி ரூபாயை இவர்கள் சம்பாதித்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

பி.டெக் முடித்தவரான அனுபவ் மிட்டல் 2015–ம் ஆண்டு டெல்லியில் நொய்டாவில் ‘அப்ளாஸ் இன்போ சொலூயூசன்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

வீட்டில் இருந்தபடி...

இந்த நிறுவனம் 3–வது நபரிடம் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாகவும் இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே, மாதம் ரூ.5,750 முதல் ரூ.57,500 வரை சம்பாதிக்கலாம் என்றும் செல்போனில் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சி அழைப்பு விடுத்தனர்.

அந்த நிறுவனம் செல்போனில் அனுப்பும் புதிருக்கு விடை அளித்து விட்டால், வாடிக்கையாளரின் சந்தா தொகைக்கு ஏற்ப தினமும் ரூ.25, ரூ.50, ரூ.75, ரூ.125 வழங்கப்படும் என்றும் இதில் கிடைக்கும் ஒவ்வொரு விருப்பத்திற்கும் (லைக்) தலா ரூ.5 கூடுதலாக அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

போலியாக ‘சர்வர்’

அதேபோல் 21 நாட்களுக்குள் கூடுதல் சந்தாதாரர்களை இணைத்தால் அதிகப் பணம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதற்காக பாஸ்வோர்டு ஒன்றையும் இணைத்து குறிப்பிட்ட சில இணையதளங்களுடன் சந்தாதாரரின் போன் இணைப்பையும் சேர்க்கும்படி அறிவித்தனர். இதற்காக காசியாபாத் நகரில் போலியான ‘சர்வர்’ தொடங்கி இருக்கின்றனர்.

இதை நம்பி நிதி நிறுவனங்களில் பணம் கட்டுவதுபோல் அனுபவ் மிட்டலின் நிறுவனத்தில் சுமார் 6½ லட்சம் பேர் பணத்தை கட்டி மோசம் போய் உள்ளனர்.

இந்த மூவர் கூட்டணியின் நூதன மோசடி குறித்து போலீசாருக்கு புகார்கள் குவிந்தபோது, இவர்கள் இணையதள முகவரியை அவ்வப்போது மாற்றிக்கொண்டே வந்துள்ளனர். கடைசியாக இவர்களை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படை போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.

ரூ.520 கோடி வங்கியில் டெபாசிட்

இதில் ஆச்சரியமான வி‌ஷயம் என்னவென்றால், இந்த மோசடியின் மூலம் கிடைத்த பணத்தில் ரூ.520 கோடி வரை இவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு வங்கிகளில் டெபாசிட்டும் செய்து இருக்கின்றனர். தவிர போலி நிறுவனத்தை நடத்திய அனுபவ் மிட்டல் ரூ.6 லட்சமும், அவருடைய உதவியாளர் இருவரும் தலா ரூ.1 லட்சமும் மாதச் சம்பளமாக எடுத்துக்கொண்டு உள்ளனர்.

இதுபற்றி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு அமித் பதக் கூறுகையில், ‘‘தங்களது மோசடி திட்டத்துக்காக இவர்கள் டெல்லியில் ஒரு கட்டிடத்தையும் வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கின்றனர். இவர்கள் மீது 1 லட்சம் பேர் புகார் கொடுத்துள்ளனர். பணத்தை ஏமாந்தவர்களுக்கு வங்கிகளில் இவர்கள் டெபாசிட் செய்த பணத்தை பெற்று, திருப்பிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Source by: http://www.dailythanthi.com/News/India/2017/02/04034828/CellphoneByRs-3700-crore-fraudEngineerIncluding3-arrested.vpf