Breaking

Tuesday, January 24, 2017

சென்னை கலவரத்தின் பின்னணி! அன்புமணி பகீர் குற்றச்சாட்டு

சென்னை கலவரத்தின் பின்னணி! அன்புமணி பகீர் குற்றச்சாட்டுசென்னையிலும், அலங்காநல்லூரிலும் நடந்த வன்முறைகளை திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டவர்கள் காவல்துறையினரும், சமூக விரோத சக்திகளும் தான் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, உண்மைகளை வெளிக்கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு சட்டப்பாதுகாப்பு பெற வேண்டும், தமிழர்களின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன் தொடங்கப்பட்ட மாணவர்களின் போராட்டம் விரும்பத்தகாத வன்முறை மற்றும் அடக்குமுறையுடன் துயர முடிவுக்கு வந்திருப்பது வருத்தமளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் 16-ம் தேதியும், சென்னை மெரினாவில் 17-ம் தேதியும் தொடங்கிய மாணவர்கள் போராட்டம் தொடக்க நாட்களில் தேசிய அரங்கிலும், பன்னாட்டு அரங்கிலும் தமிழகத்துக்கு எந்த அளவுக்கு பெருமை சேர்த்ததோ, அதே அளவுக்கு கடைசி நாளில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் சிறுமை சேர்த்துள்ளன. அதேநேரத்தில் அறவழிப் போராட்டத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை நடத்த நிகழ்வுகளை கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால் ஓர் உண்மையை உறுதியாக சொல்லலாம். சென்னையில் நேற்றைய போராட்டத்தின்போது வெடித்த வன்முறைகளுக்கு மாணவர்கள் காரணம் அல்ல என்பது தான் அந்த உண்மையாகும். தமிழர்களின் இழந்த உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற வேகம் தான் அவர்களிடம் இருந்ததே தவிர, வேறு எந்த எதிர்பார்ப்போ,  உள்நோக்கமோ அவர்களிடம் இல்லை. அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தனர்.

சென்னை மெரினாவில் போராட்டம் தொடங்கிய 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அனைத்து நாட்களும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். அனைத்து நாட்களும் கடற்கரையில் சக போராட்டக்காரர்களுடன் தான் அவர்கள் தங்கியிருந்தனர். அவர்களின், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துக்கு எந்த பங்கமும் வராமல் சகோதரிகளைப் போல கவனித்துக் கொண்டவர்கள் மாணவர்கள்தான். போராட்டத்தின் போது எவரேனும் பொருட்களை தவற விட்டிருந்தால், அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த பொருள் சம்பந்தப்பட்டவர்களை சென்றடைந்த அதிசயம் நிகழ்ந்தது. போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையில் காவலர்களுடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் மாணவர்கள் ஈடுபட்டனர். இப்படிப்பட்டவர்கள்  வன்முறையை நிகழ்த்தினார்கள் என்றால் அதை எதிரிகள் கூட ஏற்கமாட்டார்கள்.

மாறாக, மாணவர்கள் போர்வையில் ஊடுருவியிருந்த நச்சுக் கிருமிகளும், சமூக விரோத சக்திகளும்தான் அனைத்து வன்முறைகளுக்கும் காரணமாகும். முழுக்க முழுக்க மாணவர்களும் சமூக அக்கறை கொண்ட இளைஞர்களும் மட்டும் களத்தில் இருந்தபோது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தங்களின் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளத் துடித்த கும்பல்கள், மாணவர்களின் போராட்டத்தை தங்களுக்கானதாக மாற்ற நினைத்து, அவமானப்பட்டவர்கள், மாணவர்கள் போராட்டம் வெற்றி பெறுவதை சகித்துக் கொள்ள முடியாமல் அதை சீரழிக்க நினைத்தவர்கள் என பலரும் உள்நுழைந்து போராட்டத்தை திசை திருப்பும் செயல்களில் ஈடுபட்டனர். அதை உறுதி செய்யும் வகையில் அன்றிலிருந்தே ஜல்லிக்கட்டுப் போராட்டம் திசை மாறிச் சென்றது. இதை சமூக அக்கறையுள்ளவர்களால் மறுக்க முடியாது. இந்த நச்சு சக்திகள் தான் கடைசி நேர கலவரத்துக்கும், வன்முறைக்கும் காரணமாகும்.

கலவரக் காட்சிகள் தொடர்பாக ஊடகங்களில் ஒளிபரப்பான காட்சிகளிலேயே இதற்கு ஆதாரங்கள் உள்ளன. விவேகானந்தர் இல்லத்துக்குப் பின்புறம் ஒரு நுழைவுவாயில் அருகில் நடந்த வன்முறையில் ஒரு கும்பல் பாலித்தீன் பைகளில் கற்களை வைத்துக் கொண்டு காவலர்கள் மீது வீசி தாக்குவதை காண முடிகிறது. ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை சாய்த்து அவற்றிலிருந்து பெட்ரோலை எடுத்து மற்ற வாகனங்களை ஒரு கும்பல் கொளுத்தும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த இரு வன்முறை நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாக மாணவர்கள் இல்லை. இதைக் காவல்துறையினரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். கலவரக் காட்சிகள் தொடர்பான காணொலி மூலம் இவர்கள் எளிதாக அடையாளம் காண முடியும். அதேபோல், சென்னை வடபழனியில் வாகனங்களை தாக்கியும், எரித்தும் வன்முறை செயல்களில் ஈடுபட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மாணவர்கள் இல்லை என்றும், சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியைச் சேர்ந்த இவர்கள், அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமூக விரோதிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் காவல்துறையினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். எரிந்து கொண்டிருந்த வாகனங்களில் இருந்து ஒரு துணியை பற்ற வைத்த பெண் காவலர் ஒருவர் அந்தத் துணியை தற்காலிக குடிசை மீது போட்டு எரிக்கும் காணொலிக் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இன்னொரு இடத்தில் காவலர் ஒருவர் ஆட்டோவை தீ வைத்து எரிக்கும் நிகழ்வும் காணொலியாக பதிவு செய்யப்பட்டு பரப்பப்படுகிறது. இந்த செயல்களை  செய்யும் காவலர்களை பிற காவலர்கள் கூட்டமாக நின்று ஊக்குவிக்கும் கொடுமையும் நிகழ்ந்துள்ளது. கலவரக்காரர்கள் தான் காவலர்களை கல்வீசித் தாக்கிப் பார்த்திருக்கிறோம். ஆனால், நேற்றைய மோதலின் போது காவல்துறையினரே கற்களை வீசும் கொடூரத்தை பல இடங்களில் பார்க்க முடிந்தது. அத்துடன்  பெண் வணிகர்களின் சாலையோரக் கடைகளை காரணமே இல்லாமல் காவலர்கள் சூறையாடினர். வேலியே பயிரை மேயும் செயலுக்குச் சிறந்த உதாரணம் காவல்துறையின் இந்த வன்முறைகள் தான்.

சென்னையிலும், அலங்காநல்லூரிலும் நடந்த வன்முறைகளை திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டவர்கள்  காவல்துறையினரும், சமூக விரோத சக்திகளும் தான் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன. தமிழக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இக்குற்றங்களை அவர்களே விசாரித்தால் உண்மை வெளிவராது.

காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடவில்லை; அதுகுறித்த காணொலி காட்சிகள் திரிக்கப்பட்டவை என்று காவல்துறை தலைமை கூறியிருப்பதிலிருந்தே அவர்களின் தவறுகளை மூடி மறைக்க முயற்சிகள் நடப்பதை உணர முடியும். எனவே, சென்னைக் கலவரங்கள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்க சி.பி.ஐ. புலன்விசாரணைக்கும், பணியிலுள்ள  உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கும் ஆணையிட வேண்டும்.

இத்தகைய விசாரணைகளுக்கு தமிழக அரசு ஆணையிடவில்லை என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி  நீதியையும், சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்ட பா.ம.க. நடவடிக்கை மேற்கொள்ளும்" என்று கூறியுள்ளார்.

Source: http://www.vikatan.com/news/tamilnadu/78629-police-are-reason-behind-yesterdays-attack-slams-anbumani.art

No comments:

Post a Comment

Comment here