பெண் வாங்கி குடித்த குளிர்பான பாட்டிலுக்குள் இறந்து கிடந்த பல்லி தயாரிப்பு நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீசுதேனி,

தேனியில் குளிர்பான பாட்டிலுக்குள் பல்லி இறந்து கிடந்தது. அதனை குடித்த பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தயாரித்த நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

குளிர்பானத்தில் பல்லி

தேனி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த சென்னராஜ் என்பவருடைய மனைவி துளசியம்மாள். நேற்று முன்தினம் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக தேனி நகர் மதுரை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, அருகில் இருந்த ஒரு பேக்கரிக்கு சென்றார்.

அங்கு 1½ லிட்டர் குளிர்பான பாட்டிலை வாங்கினார். அந்த பாட்டிலை துளசியம்மாளால் திறக்க முடியாததால், பேக்கரியில் வேலை பார்க்கும் பெண்ணிடம் கொடுத்து அதனை திறக்கச் சொன்னார். பின்னர், இந்த குளிர்பானத்தை துளசியம்மாள் குடித்த போது, பாட்டிலுக்குள் பல்லி இறந்து கிடப்பதை பார்த்துள்ளார். உடனே அவர் இதுகுறித்து கடையில் இருந்த பணியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

பின்னர், அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு, குளிர்பானத்தில் பல்லி இறந்து கிடந்தது குறித்து தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் நடந்த விவரங்களை துளசியம்மாள் கூறினார். ஆனால், இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் தான் புகார் செய்ய வேண்டும் என்று, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகுணா தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ், மோகன்தாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட பேக்கரி கடைக்கு சென்று சோதனை நடத்தினர். தேனி பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகுணாவிடம் கேட்ட போது, ‘பல்லி இறந்த கிடந்த குளிர்பானம் கடந்த 21–10–2016 அன்று தயாரிக்கப்பட்டு உள்ளது. அதே நாளில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் குறித்து தேனியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இப்படி எதுவும் சிக்கவில்லை. இந்த குளிர்பான நிறுவனத்தின் மொத்த விற்பனைக்கூடம் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் உள்ளது. அங்கும் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் உள்ள சம்பந்தப்பட்ட குளிர்பானம் தயாரிப்பு நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி செய்த போதே இந்த தவறு நடந்துள்ளது. இதன் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வு முடிவு வந்தபிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.