இளைஞர்களின் போராட்டத்தால் பெருமை கொள்கிறேன்: ஏ.ஆர்.ரஹ்மான்இளைஞர்களின் அமைதியான போராட்டத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார்.

மாலை 6 மணியளவில் PERISCOPE இணையம் லைவ்வில் பேசினார். அப்போது, "காலை 4:30 மணிக்குப் பிறகு இப்போது தான் ஜூஸ் அருந்தவுள்ளேன். மகன் அமீனும் என்னோடு உண்ணாவிரதம் இருந்தார்.

இளைஞர்களின் அமைதியான போராட்டத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அனைத்தும் நல்லபடியாக முடிவு வரும் என நம்புகிறேன்" என்று பேசினார்.

தனது பேச்சின் இடையே "தமிழா.. தமிழா கண்கள் கலங்காதே" என்ற பாடலை சில வரிகள் பாடினார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த உண்ணாவிரதத்துக்கு ஜி.வி.பிரகாஷ் நேரில் நன்றி தெரிவித்தார். "உலக தமிழர்களுக்காக எனது மாமா உண்ணாவிரதம் இருந்ததிற்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன்" என்று தெரிவித்தார் ஜி.வி.பிரகாஷ்.