தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நடந்த மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற 9-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். அவருடைய தாயார் கண் எதிரேயே இந்த துயர சம்பவம் நடந்தது.

விளையாட்டு போட்டி

தூத்துக்குடி தருவையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன.

‘கேலோ இந்தியா‘ என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தடகளம், டேக்வாண்டோ, கைப்பந்து, பளு தூக்குதல், பேட்மிண்டன், குத்துச்சண்டை, நீச்சல், டேபிள் டென்னிஸ், கபடி, டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொள்ள தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த 1200 மாணவ-மாணவிகள் வந்திருந்தனர்.

குத்துச்சண்டை போட்டி

மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரத்தை சேர்ந்த கென்னடி என்பவருடைய மகள் மாரீசுவரி (வயது 14) பங்கேற்றார். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடம் ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

மதியம் 12-30 மணி அளவில் மாணவி மாரீசுவரி பங்கேற்ற குத்துச்சண்டை போட்டி தொடங்கியது. இந்த போட்டியை பார்ப்பதற்காக மாரீசுவரியின் தாயார் ஈசுவரி, அண்ணன் மாரிச்செல்வன் ஆகியோரும் விளையாட்டு அரங்கத்துக்கு வந்து இருந்தனர். அவர்கள் மாரீசுவரியை உற்சாகப்படுத்தி போட்டியில் பங்கேற்க அனுப்பினர்.

மாரீசுவரி தனது முதல் போட்டியில், வேறொரு பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 14 வயது மாணவியை எதிர்த்து விளையாடினார். இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினர். முதல் சுற்று 30 வினாடிகள் நடந்தன. அந்த சுற்று முடிவில் இரு வீராங்கனைகளும் சமநிலையில் இருந்தனர். அப்போது இருவருக்கும் ½ நிமிடம் இடைவேளை அளிக்கப்பட்டது.

மயங்கி விழுந்து சாவு

இடைவேளையின் போது மாணவி மாரீசுவரி சற்று மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே வெளியே வந்து முகத்தை கழுவிவிட்டு மீண்டும் போட்டிக்கு தயாரானார். அவர் போட்டி நடைபெறும் மேடைக்குள் சென்றதும் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிருக்கு போராடினார். இதைப்பார்த்த அவருடைய தாயார், அண்ணன், பார்வையாளர்கள் மற்றும் போட்டி அமைப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாரீசுவரியை உடனடியாக ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல்சிகிச்சைக் காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் சற்று நேரத்தில் மாணவி மாரீசுவரி பரிதாபமாக இறந்தார்.

அதிகாரிகள் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் கூறும் போது, ‘மாவட்ட விளையாட்டு அரங்கில் மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற மாணவி மாரீசுவரி முதல் முறையாக விளையாடி உள்ளார். அவர் குறைந்த காலத்தில் பயிற்சி பெற்று விளையாடி இருப்பது தெரியவந்து உள்ளது. இதனால் அவருக்கு உடல் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. விளையாட்டு மைதானத்தில் முதலுதவிக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. இருந்தாலும் மாணவி மாரீசுவரி உயிரிழந்திருப்பது வேதனையை தருகிறது“ என்று கூறினார். மாணவி மாரீசுவரி உயிரிழந்தது தொடர்பாக தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு போட்டிகளில் பங்கேற்க வந்திருந்த வீரர்-வீராங்கனைகளும், மாணவி மாரீசுவரியின் சொந்த ஊரான சோரீஸ்புரம் கிராம மக்களும் சோகத்தில் மூழ்கினார்கள்.

குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற மாணவி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பாக பேசப்பட்டது.