ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது: முகுல் ரோஹத்கிஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியுள்ளார்.

டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றக்கோரி முதல்வர் வலியுறுத்தினார். தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

இந்நிலையில் தமிழக அரசு கொடுத்த மனுவின் மீது மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியிடம் ஆலோசனை கேட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த முகுல் ரோஹத்கி, ''ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.

காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற நோக்கத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது. காளைகளைப் பாதுகாக்கவும், காளைகளைப் பாதிக்காத வகையிலும் வலுவான சட்டங்கள் கொண்டு வந்தால் தமிழக அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஆட்சேபிக்க வாய்ப்பில்லை'' என்று கூறியுள்ளார்.

Source: http://tamil.thehindu.com