காவல் நிலையம் தீ வைப்பு; வன்முறையில் ஈடுபட்டது போராட்டக்காரர்கள் கிடையாது - போலீஸ்சென்னை,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், மாணவர்கள் காலை போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கடற்கரை அருகே உள்ள ஐஸ்அவுஸ் பகுதி மக்களும், இளைஞர்களும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று காலை மெரீனா கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் போலீசாரால் மூடி “சீல்” வைக்கப்பட்டன. இதன் காரணமாக கடற்கரைக்கு யாருமே செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

திருவல்லிக்கேணி பெசன்ட் ரோடு, ஐஸ்அவுஸ் அவ்வை சண்முகம் சாலை ஆகிய இடங்களில் இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஒரு மர்ம கும்பல் போலீசாரை நோக்கி திடீரென சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியது.

திருவல்லிக்கேணி பெசன்ட் ரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதற்கிடையே ஐஸ்அவுஸ் அவ்வை சண்முகம் சாலையில் ராணிமேரி கல்லூரி அருகே மற்றொரு மர்ம கும்பல் பயங்கர ரகளை மற்றும் வன்முறையில் ஈடுபட்டது.

இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தங்கள் கைகளில் லத்தி உள்பட எந்த ஆயுதமும் இல்லாமல் போலீசார் காணப்பட்டனர். அவ்வை சண்முகம் சாலையில் குவிக் கப்பட்டிருந்த போலீசாரும் தங்கள் கைகளில் தடி எதுவும் இல்லாமல் இருந்தனர். போலீசாரிடம் ஆயுதம் இல்லை என்பதை அறிந்த அந்த மர்ம கும்பல் போலீசாரை நோக்கி சரமாரியாக கற்களை வீசினார்கள். மர்ம கும்பல் அத்துமீறிய தால் உஷாரான போலீசார் தடிகளை எடுத்து வந்து அவர்கள்மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

அதன் பிறகும் அங்கு நிலைமை சீராகவில்லை. மர்ம கும்பல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டது. தொடர்ந்து கற்களை வீசினார்கள்.
கல்வீச்சில் 22 போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு புறம் மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டே எதிர் முனையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடக்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டனர். கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. இதனால் ராணிமேரி கல்லூரி அருகே பதட்டமும் பரபரப்பும் காணப்பட்டது. அந்த பகுதியே போர்க்களமாக மாறியது.

இதற்கிடையே ஐஸ்அவுஸ் பகுதியில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காவல் நிலையம் முன்னதாக இருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டது போராட்டக்காரர்கள் கிடையாது எனவும், அப்பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் போலீஸ் தெரிவித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

Source: http://www.dailythanthi.com/News/State/2017/01/23131837/Police-say-locals-were-involved-and-not-protesters.vpf