தடியடியை தவிடு பொடியாக்கி சிங்கங்கள்.. வெள்ளமென திரண்டு வந்து மெரீனாவை மீண்டும் கைப்பற்றினர்!சென்னை: தமிழக அரசு, காவல்துறையின் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி வருகிறது சென்னை மெரீனா போராட்டம். சிதறி ஓடிய மாணவர்கள் மீண்டும் திரும்பி பெரும் கூட்டமாக கூடி வருகின்றனர். இதனால் மீண்டும் மெரீனா கடற்கறையில் இளைஞர்கள் கூட்டம் ஆக்கிரமித்து விட்டது. தடியடியை தவிடு பொடியாக்கி விட்டனர் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும்.

கிட்டத்தட்ட மெரீனாவை மீண்டும் தங்களது கட்டுக்குள் மாணவர்கள் கொண்டு வந்து விட்டனர். போலீஸார் தடுக்கவோ, தடியடி நடத்தவோ முயலாமல் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக அங்குமிங்கும் போய்க் கொண்டுள்ளனர். முன்பு காமராஜர் சாலையையொட்டி நிறைந்திருந்த இளைஞர் படை தற்போது கடலுக்கு வெகு அருகில் நிலை கொண்டுள்ளது.

சிதறி ஓடிய அத்தனை பேரும் மீண்டும் திரும்பி வருகிறார்கள். இதனால் மீண்டும் மெரீனாவில் இளைஞர் படை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. முன்பு இருந்த பதட்டம் சற்று குறைந்து இளைஞர்களும், மாணவர்களும், பெண்களும் கடற்கரை பரப்பை நிறைத்து அமர்ந்து வருகின்றனர்.

என்னதான் அடித்தாலும், துரத்தினாலும் எங்களது போராட்டம் ஓயாது.. இதுதான் மக்கள் சக்தி.. இதுதான் இளைஞர் சக்தி.. இதுதான் மாணவர் சக்தி.. இதை கலைக்க முனையாதீர்கள் என்பதை காவல்துறைக்கு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது மெரீனா எழுச்சி.