ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் அச்சத்துக்கு காரணம் இல்லை: மார்கண்டேய கட்ஜூ விளக்கம்புதுடெல்லி,


ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்து சில இடங்களில் போட்டிகள் நடைபெற்றது. இருப்பினும் நிரந்தரமான தீர்வு வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டம் நீடித்து வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வரும் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சமூக வலைதளங்களில் எழுப்படும் கேள்விகளுக்கு விளக்கமளித்து வருகிறார்.

முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள தகவலில் ''ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தமிழக சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்பட்டால் அதுவே நிரந்தரமாக இருக்கும். கவலைப்பட வேண்டாம்'' என்று கூறினார்.

போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் விளக்கம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் முதன்முறையாக சாதி, மத எல்லைகளை கடந்து நடத்தப்பட்ட ஒரு மாபெரும் போராட்ட இயக்கம் வெற்றிபெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
அரசியலமைப்பு சட்டம் 213(2) பிரிவின் படி தமிழ்நாடு கவர்னரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர சட்டம் தற்காலிகமானது என மக்கள் கூறுகின்றனர். ஆம், கவர்னரால் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் தற்காலிகமானது என்பது உண்மைதான்.

எனினும், நாளை தமிழ்நாடு சட்டசபை கூடும்போது, இந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்கும் மசோதா தாக்கல் செய்யப்படும். அந்த சட்டத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்படலாம் என்பதும் உண்மை. ஆனால், அந்த வழக்கு வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இல்லை. இவ்விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 254(2)-ன்படி ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று நினைக்கும் ஆதரவாளர்களின் அச்சத்துக்கு நியாயமான காரணம் இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்து உள்ளார்.