கடலூர்,

கடலூரில், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 2½ வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

2½ வயது பெண் குழந்தை

கடலூர் மஞ்சக்குப்பம் புவனேஸ்வரிநகரை சேர்ந்தவர் முகமதுஅலி (வயது 38). இவர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தள்ளுவண்டியில் நூடுல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய முதல் மனைவி ஆஷா. இவர்களுக்கு 2½ வயதில் ஹாத்திபா என்கிற பெண் குழந்தை இருந்தது.

இதற்கிடையில் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ஆஷா முகமது அலியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஹாத்திபா தந்தையுடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முகமதுஅலி ‌ஷகிலாபானு என்பவரை 2–வது திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து 3 பேரும் புவனேஸ்வரிநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

தண்ணீர் தொட்டிக்குள் பிணம்

கடந்த 3–ந்தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஹாத்திபா திடீரென காணாமல் போனார். அவரை முகமது அலி பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இது பற்றி முகமது அலி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஹாத்திபாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டு குடிநீர் குழாயில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து இரவு 8.30 மணி அளவில் வீட்டு உரிமையாளர் குணசேகரன் மொட்டை மாடியில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் எலி ஏதாவது செத்து கிடக்கிறதா? என்பதை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் அவர் சிமெண்டு சிலாப்பை திறந்து தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது, அங்கே ஹாத்திபா தண்ணீரில் பிணமாக மிதந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன் இது பற்றி முகமதுஅலியிடம் தெரிவித்தார்.

தண்ணீரில் மூழ்கடித்து கொலை

இதையடுத்து முகமதுஅலி மற்றும் உறவினர்கள் ஹாத்திபா உடலை பார்த்து கதறி அழுதனர். உடன் இது பற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், சப்–இன்ஸ்பெக்டர் ஞானமூர்த்தி, ஏட்டு நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டி மாடி தளத்தில் இருந்து 6 அடி உயரத்தில் உள்ளது. எனவே குழந்தை தானாக ஏறி விழுந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

தொடர்ந்து இறந்த ஹாத்திபா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஹாத்திபாவை கொலை செய்து, தண்ணீர் தொட்டிக்குள் வீசினார்களா? அல்லது தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்தார்களா? அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பேரிடம் விசாரணை

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக முகமது அலி, அவருடைய 2–வது மனைவி ‌ஷகிலாபானு, மற்றொரு வாலிபர் ஆகிய 3 பேரிடமும் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் தொட்டிக்குள் 2½ வயது பெண் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.