ஜல்லிக்கட்டை சென்னையிலும் தமிழர் திருவிழாவாக நடத்த வேண்டும்: ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்இப்புரட்சியின் நினைவாக ஒரு மாபெரும் தமிழர் திருவிழாவாய் வருடந்தோறும் நடத்த வேண்டுமென்று தமிழக அரசுக்கு ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டம் 7-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கு சென்று இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் ஆர்.ஜே.பாலாஜி.

தற்போது அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. அதில் அவர் கூறியிருப்பது:

"கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே பார்க்காத அளவிற்கு ஒரு மாபெரும் புரட்சியை மக்களாகிய நாம் நிகழ்த்தியிருக்கிறோம். இந்தப் புரட்சி எந்த அளவிற்கு ஒரு முக்கியமான வரலாற்று பதிவென்றால் மக்களாகிய நாம் தெருவில் இறங்கி நம்முடைய உரிமைக்காக போராட்டி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்.

நமது புரட்சியினால் நமது அரசாங்கம் ஜல்லிக்கட்டை ஒரு அவசர சட்டம் மூலம் நிரந்தரமாக நடத்துவதற்கு எல்லா வழிவகையையும் செய்வதாக உறுதி அளித்திருக்கிறது. கிட்டத்தட்ட 3 வருடமாக யாருமே முயற்சி எடுக்காத யாருமே நம்மை முன்னிறுத்திப் பேசாத ஒரு விஷயத்திற்காக நாம் தெருவில் இறங்கி போராடியதால் கிடைத்த விளைவும், அதோட வெற்றியும் தான் இது. ஆனால், நிரந்தர வெற்றி என்பது Amend PCA & Ban PETA தான். இதை அடைவதே நமது லட்சியம்.

இது ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் என்றாலும் கிட்டதட்ட ஒரு 20, 25 வருடமாக அனைத்து மக்கள் மனதிலும் இருந்த கோபம், ஆதங்கம் எல்லாவற்றுடைய வெளிப்பாடாக காவிரி பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, பெப்சி கோக் தடை செய்ய வேண்டும் என்ற பல விஷயங்களை இந்தப் புரட்சி பேச வைத்தது. நம்மைச் சுற்றி நிகழும் பல அரசியல் நிகழ்வுகளை இது கவனிக்க வைத்தது. அரசியல் என்பது தேர்தலில் நிற்பது மட்டுமல்ல. தெருவில் இருக்கும் ஒரு மரம் வெட்டப்பட்டுவதை நாம் தடுத்தால் அதுவும் ஒரு பெரிய அரசியல் என்று புரிய வைத்தது. இது தான் நிதர்சனமான உண்மை,

இந்தப் புரட்சி அறவழியில் நடந்ததாலேயே உலகம் இதை ஏற்றுக் கொண்டது. இந்தியா இந்தப் போராட்டத்தை புரிந்து கொண்டதோ, இல்லையோ நாம் தமிழன் என்கிற உணர்ச்சியோடு ஒன்றாக சேர்ந்திருக்கிறோம் என்று புரிந்து கொண்டது. இந்தப் புரட்சியில் கிடைத்த வெற்றியை ஒரு ஆரம்பம், தொடக்கம் என்று எடுத்துக் கொண்டு இதைக் கொண்டாடுவோம். இது மட்டுமல்ல, இதன்பின் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கடைகோடித் தமிழனாக நான் உங்களின் பின் நிற்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். இந்த மக்கள் புரட்சி வெற்றி பெற்றதன் அடையாளமாக ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்துவோம் என்று உறுதி அளித்திருக்கிறீர்கள். இந்த ஜல்லிக்கட்டை தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலும் தீவுத்திடலில் வருடா வருடம் அனைத்து தமிழர்களும் ஒன்றாக இணைந்து நடத்திய இந்த புரட்சியின் நினைவாக ஒரு மாபெரும் தமிழர் திருவிழாவாய் நடத்த வேண்டுமென்று ஒரு தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

Source: http://tamil.thehindu.com/cinema/tamil-cinema