பெங்களூரு,

பெங்களூருவில் தனியார் ஷாப்பிங் மால் நிறுவன பெண் ஊழியருக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூருவில் கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந் தேதி எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மர்ம நபர்கள் சிலர், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுமைகள் அரங்கேறின. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து 6 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். மேலும் கடந்த 1-ந் தேதி அதிகாலையில் கம்மன ஹள்ளி 5-வது மெயின் ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெங்களூரு மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் இது வரை கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், பெங்களூருவில் தொடரும் கொடுமையாக மேலும் ஒரு பெண்ணுக்கு நடுரோட்டில் வைத்து ஒரு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி அருகே  வசித்து வருபவர் கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர், பெங்களூருவில்  தனியார் நடத்தும் ஷாப்பிங் மாலில்  ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலையில் அவர் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டு சென்றார். கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எஸ்.பி.ஆர். லே அவுட் பகுதியில் வைத்து, கார்த்திகாவை  பின் தொடர்ந்து ஒரு மர்ம வாலிபர் வந்தார். சொட்டர் மற்றும் குல்லா அணிந்து இருந்த அந்த வாலிபர்  திடீரென்று கார்த்திகா அருகில் வந்து அவரை கட்டிப்பிடித்தார். பின்பு அவர் கார்த்திகாவின் உதட்டையும் நாக்கையும் கடித்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் வசிப்பவர்கள் ஓடி வந்தார்கள். இதனால் அந்த மர்ம வாலிபர், அவரை தாக்கியதுடன், அவரை கடித்து வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மர்ம வாலிபர் தாக்கியதிலும், கடித்ததிலும் கார்த்திகாவின் முகம், கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.

இது பற்றி அவர் உடனடியாக தன்னுடைய குடும்பத்தினருக்கு செல் போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். பின்னர் அவரது குடும்பத்தினர் சம்பவம் நடந்த இடத்தில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா? என்று பார்த்தார்கள். அப்போது அங்கு உள்ள ஒரு டீக்கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே அந்த டீக்கடை உரிமையாளரிடம் நடந்த சம்பவங்களை கூறி, அங்கிருந்த கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது அந்த கண்காணிப்பு கேமராவில் கார்த்திகாவை மர்ம வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வரும் காட்சிகள் மட்டும் பதிவாகி இருந்தது. ஆனால் கார்த்திகாவுக்கு மர்ம வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை தாக்கிய சம்பவம் சிறிது தூரம் தள்ளி நடந்திருந்ததால், அது தொடர்பாக எந்த காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை.

அதைத்தொடர்ந்து, நடந்த சம்பவங்கள் பற்றி கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் போலீசாரிடம் வழங்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் மர்ம வாலிபரின் உருவம் பதிவாகி உள்ளதால், அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.