வங்கியில் இருக்கும் பணத்தை டோர் டெலிவரி செய்யும் ஸ்னாப்டீல்: புதிய சேவை அறிவிப்பு | Snapdeal to deliver cash at your doorstepபுதுடெல்லி:

நாட்டில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையை தொடர்ந்து ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு இன்றும் தொடர் கதையாகி இருக்கிறது. இதன் காரணமாக மக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை, ஸ்னாப்டீல் தளம் டோர் டெலிவரி செய்வதாக அறிவித்துள்ளது. கேஷ்@ஹோம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மற்றும் வங்கிகளின் வரிசையில் நிற்க வேண்டிய அவஸ்தையை போக்குகிறது.

ஸ்னாப்டீலில் இந்த சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 1 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் ஃப்ரீசார்ஜ் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும். தன் வங்கியில் இருந்து எடுக்கப்பட வேண்டிய 2000 ரூபாய் பணத்தினை வாடிக்கையாளர்கள் தங்களின் ஏடிஎம் கார்டு பயன்படுத்தி செலுத்தலாம்.

இந்த சேவையை பயன்படுத்த ஸ்னாப்டீல் தளத்தில் எவ்வித பொருளையும் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. வாடிக்கையாளர்களுக்கு பணத்தை விநியோகம் செய்ய ஸ்னாப்டீல் தளத்தின் கேஷ் ஆன் டெலிவரி பண முறையில் கிடைக்கும் தொகை பயன்படுத்தப்படுவதாக ஸ்னாப்டீல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளருக்கு பணம் விநியோகம் செய்யப்படும்போது அவர்கள் தங்களின் டெபிட் கார்டு மூலம் ஸ்வைப் செய்து ஸ்னாப்டீல் விநியோக பணியாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று கொள்ளலாம். பண பரிமாற்றம் செய்து முடித்ததும் வாடிக்கையாளரிடம் பணம் ஒப்படைக்கப்படுகிறது.

வீட்டிற்கே வந்து பணத்தை வழங்கும் ஸ்னாப்டீல் தளத்தின் இந்த சேவை தற்சமயம் குர்கிராம் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நகரங்களில் மிக விரைவில் இந்த சேவை வழங்கப்படும் என ஸ்னாப்டீல் தெரிவித்துள்ளது.