துருக்கி ராணுவ வீரர்களை உயிரோடு தீயில் கொளுத்தும் வீடியோவை வெளியிட்டது ஐ.எஸ் இயக்கம் | Islamic state video shows turkish troops burned aliveசிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். அமைப்பினரின் கொட்டத்தை அடக்கும் பணியில் அண்டை நாடான துருக்கியின் படைகளும் ஈடுபட்டுள்ளன. இதனால், துருக்கி படைகள் மீது கடும் ஆத்திரத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் உள்ளனர். இந்த நிலையில், ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தனது இணையதளத்தில் கொடூர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இரண்டு துருக்கி ராணுவ வீரர்களை உயிரோடு தீயில் எரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீயிட்டு எரிக்கும் முன் இரு வீரர்களையும் ஒரு கூண்டுக்குள் ஐ.எஸ் இயக்கத்தினர் நிறுத்தியுள்ளனர். 19 நிமிடங்கள் இந்த வீடியோ ஓடுகிறது. சிரியாவின் வடக்குமாகணமான அலப்போ மாகாணத்தில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.  ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் நாளான அமக் இதழில் கடந்த மாதம் இரு துருக்கி ராணுவ வீரர்களை கடத்தியதாக கூறியிருந்தனர்.அதேபோல், துருக்கி ராணுவம் இரு வீரர்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாக தனியாக கூறியிருந்தது.

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள அல் பாப்  நகரில், நேற்று முன்தினம் அந்த அமைப்பினருக்கும் துருக்கி படையினருக்கும் கடுமையான மோதல்கள் வெடித்தன.இந்த மோதல்களின் முடிவில் துருக்கி படை வீரர்கள் 14 பேர் பலியாகினர். 33 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் நடைபெற்ற இரு தினங்கள் ஆன நிலையில், இந்த கொடூர விடியோ வெளியாகியுள்ளது.