இளைஞர்கள் தப்பி ஓட நினைக்க வேண்டாம்: சென்னை போலீசார் வேண்டுகோள் | Chennai police request youths do not try to flee




சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் ரோட்டில் போலீஸ் ஏட்டு புருஷோத்தமன், ஊர்க்காவல் படை வீரர் சிவா ஆகியோர், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த முகிலன் என்ற கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். பின்னால் நண்பர்கள் கிஷோர், சந்தோஷ் ஆகியோர் இருந்தனர்.

இவர்களை பார்த்ததும், ஏட்டு புருஷோத்தமன் மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி கூறினார். முகிலன் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதால், ஊர்க்காவல்படை வீரர் சிவா லத்தியால் தடுத்துள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் முகிலன் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு பலியானார். மற்ற 2 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர். இதற்கு முன்னரும், போலீசார் வழிமறித்ததால், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோன்ற தொடர் சம்பவங்களுக்கு காரணம் என்ன? என்பது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இரவு ரோந்து பணியின் போது குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தவே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வழிப்பறி கொள்ளை, செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்கவே வாகன சோதனையும், இரவு ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவில் போலீசார் உஷாராக செயல்பட்ட காரணத்தாலே கொலையாளி ஒருவர் வடபழனியில் உடனடியாக பிடிபட்டார்.

இரவு ரோந்தின்போது, இளைஞர்கள் பலர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் செல்வது என்பது எப்போதும் நடக்கக்கூடிய செயலாகவே இருக்கிறது. இந்த மனநிலையை வாலிபர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஆவணங்கள் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். அதுபோல மது குடித்திருந்தாலும் போலீஸ் நடவடிக்கைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாறாக போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயலும்போதும், தான் போலீசாருக்கு சந்தேகம் வலுக்கும், விரட்டிப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே போலீசாரை பார்த்து இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் மிரள வேண்டாம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையே வாலிபர் முகிலன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை லத்தியால்தடுத்த ஊர்காவல் படைவீரர் சிவா மீது நடவடிக்கை பாய்கிறது. போலீஸ் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முடிவில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.