அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் கொடி ஏற்றப்பட்டது | Chennai party flag hoisted again at AIADMK HQS
உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதா காலமானதாக மாலை 5.30 மணியளவில் ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த தகவல் காட்டுத்தீ போல் சமூக வலைதளங்களிலும் பரவியது.

ஜெயலலிதா உயிரிழந்தார் என்ற செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதற்கிடையே, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் டுவிட்டர் மூலமாகவும் அறிக்கை மூலமாகவும் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை மறுத்து செய்தி வெளியிடப்பட்டது.

ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்திகள் பரவி வருகிறது. உடல் நிலை குறித்து தவறான தகவல்கள் வெளியாகின்றன. அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட அதிமுக கொடி  மீண்டும் ஏற்றப்பட்டது.