ஆன்லைனில் பணம் செலுத்தினால் தள்ளுபடி: பிஎஸ்என்எல் அறிவிப்பு | BSNL Customers to get discount on Epayment of Billsபுதுடெல்லி:

பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் மின்னணு முறையில் மாத கட்டணங்களை செலுத்தினால் கட்டணத்தில் இருந்து 0.75 சதவிகிதம் வரை தள்ளுபடி பெற முடியும் என மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'மத்திய அரசின் பணமில்லா பரிமாற்ற திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பிஎஸ்என்எல் சேவைக்கான கட்டணத்தை ஆன்லைன் அல்லது மின்னணு முறையில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 0.75 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அனைவரும் பணமில்லா சமுதாயத்தை நோக்கி பயணிக்க வேண்டும்', என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் போர்டல் அல்லது மொபைல் ஆப் மூலம் கட்டணத்தை செலுத்தி இந்த தள்ளுபடியினை அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களும் பெற முடியும். ஆன்லைன் அல்லது மின்னணு முறையில் கட்டணங்களை செலுத்தும்போது, சேவை வரி இல்லாமல் கட்டணத்தில் இருந்து சுமார் 0.75 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

இந்த சலுகை டிசம்பர் 22, 2016 முதல் மார்ச் 31, 2017 வரை அனைத்து போஸ்ட்பெயிட், (லேண்ட்லைன், பிராட்பேன்ட், ஜிஎஸ்எம்) மற்றும் ஜிஎஸ்எம் ப்ரீபெயிட் கட்டணங்களுக்கு பொருந்தும். போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த கட்டணத்தில் இந்த தள்ளுபடி பொருந்தும்', என பிஎஸ்என்எல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதோடு சமீபத்தில் பிஎஸ்என்எல் சில புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறது. அதன்படி ரூ.99 செலுத்தி 300எம்பி டேட்டா, அனைத்து பிஎஸ்என்எல் எண்களுக்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இச்சேவைகளுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுவதோடு, இந்த கட்டணம் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மாறுபடும் என்றும் அறிவிக்கப்பட்டது.