அக்கரையில் இருந்து குறி பார்த்து சுட்ட காயத்ரி... குண்டு பாய்ந்து செத்துப்போன நம்பி - தெய்வமகள் | Deivamagal serial witness murderசென்னை: காயு டார்லிங்... காயு டார்லிங் என்று கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக கொஞ்சி வந்த அறிவுடை நம்பியை நம்ப வைத்து சொத்துக்களை கைப்பற்றிக் கொண்டு கடைசியில் கொலை செய்து விட்டாள் அவரது காதலி காயத்ரி. இது எங்கே எப்போது நடந்து என்று யோசிப்பவர்களுக்கு ஒரு சின்ன சீரியல் கதை.

ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தின் மூத்த மகன் குமாரின் மனைவி காயத்ரி. கோடிக்கணக்கான மதிப்புள்ள அந்த வீட்டை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் காயத்ரியின் லட்சியம். இந்த லட்சியத்திற்கு காயத்ரியின் தங்கை வினோதினியும், அவரது தோழி லேகாவும் முழு உடந்தை.

ஜெய்ஹிந்த் விலாஸ் இரண்டாவது மகன் ராஜூ அவரது மனைவி திலகா, மூன்றாவது மகன் பிரகாஷ் அவரது மனைவி சத்யாவிற்கு காயத்ரியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போகவே பிரச்சினை ஆரம்பிக்கிறது.

குமாருக்கும், காயத்ரிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் இருவருக்கும் விவாகரத்து கிடைக்கிறது. ஜெய்ஹிந்த் விலாஸை அடையும் நோக்கில் குமாரை மீண்டும் திருமணம் செய்வேன் என்று காயத்ரி கூறுகிறாள். ஆனால் குமாருக்கு மறு திருமணம் நடத்தி வைக்கிறான் கொழுந்தன் பிரகாஷ்.

காயத்ரியின் சபதம்

சத்யாவை பிரித்து அனைவரையும் வீட்டை விட்டு துரத்தி தனது திருமண நாளன்று ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டு மருமகளாக வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பேன் என்று பிரகாஷிடமும் மாமனார் மாமியாரிடமும் பகிரங்கமாக சபதம் போடுகிறாள் காயத்ரி.

நம்பியின் பிணம்

சத்யா தான் நம்பியை கொன்று விட்டதாக கூறி அவரை கைது செய்ய வைத்து சிறையில் தள்ளிய காயத்ரி, சிறையில் வார்டனுக்கு பணம் கொடுத்து கொடுமை படுத்த சொல்கிறாள். இது இல்லத்தரசிகளை உச்சு கொட்ட வைக்கிறது. ஆனால் எத்தனை சிறைகளில் இது போல நடக்கிறது என்று கேட்கின்றனர் பார்வையாளர்கள்.

குபேரன் மச்சம்

நம்பியின் மாமா பிணத்தை பார்த்து விட்டு அறிவுடைநம்பி காலில் குபேரன் மச்சம் இருப்பதாக கூறி அது நம்பி இல்லை என சொல்ல, கந்தசாமியோ அவரை சமாதானம் படுத்தும் போது அவ்வழியில் வரும் பிராகாஷ் கேட்க, அதற்குள் தந்திரமாக காயத்திரி நம்பி என கூற பட்ட உடலை எரித்துவிடுகிறார். இது சத்யாவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

கடத்தும் காயத்ரி

நம்பியை புதைக்கும் நேரத்தில் உயிர் இருப்பதை அறிய , அதே நேரத்தில் கந்தசுவாமி போன் செய்து ஜெய் ஹிந்த் விலாஸ் பத்திரத்தை போலி லாக்கர் சாவி தயார் செய்து அந்த ஒரிஜனல் பத்திரத்தை எடுத்து விட்டு பொய் பத்திரம் தயாரித்து அறிந்து நம்பியை அடித்தும், குடியை ஊற்றி கொடுத்தும் பயன் இல்லாமல் போகிறது.
நம்பி உயிரோடு இருப்பது பிரகாசுக்கு தெரியவரவே அவனை கேரளாவிற்கு கடத்துகிறாள்.

லேகாவின் கெஸ்ட் ஹவுஸ்

நம்பியை ஆழப்புழாவில் உள்ள லேகாவின் கெஸ்ட் ஹவுசில் கொண்டு போய் அடைத்து வைக்க, அங்குள்ள சத்யாவின் தோழி மூலம் பிரகாஷ்க்கு உதவி கிடைக்கவே நம்பியைப் பற்றி தகவல் கிடைக்கிறது. உடனே நம்பியை போட் வீட்டிற்கு இடம் மாற்றுகின்றனர்.

சத்யாவிற்கு டெங்கு காய்ச்சல்

சிறையில் சத்யாவிற்கு காய்ச்சல் வரவே, மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அங்கே டெங்கு என்பது தெரியவருகிறது. உயிர் பிழைக்க சாத்தியமில்லை என்று கூறவே அதைக் கேட்டு பிரகாஷ் கலங்குகிறான். ஆனாலும் நம்பியைத் தேடும் முயற்சி தொடர்கிறது.

காப்பாற்றிய பிரகாஷ்

நம்பியை கொல்லும் நோக்கில் கேரளா வருகிறாள் காயத்ரி. அதற்குள் தண்ணீருக்குள் நம்பி குதித்து விட, அவனை பிரகாஷ் காப்பாற்றுகிறான். நடந்த உண்மைகளை சொல்ல நம்பி முயற்சி செய்கிறான். அது முடியாமல் போகிறது.

சுட்டுக்கொன்ற காயத்ரி

அக்கரையில் படகில் இருந்து நம்பியின் நெற்றியை குறி பார்த்து சுடுகிறாள். குண்டடிபட்ட நம்பி உண்மையை சொல்லாமலேயே செத்துப்போகிறான். நம்பி இதுநாள்வரை உயிரோடு இருப்பது தெரிந்ததே என்பதுதான் இப்போதைக்கு பிரகாஷின் ஆறுதல்.

தொடர் கொலைகள்

நம்பியைப் பற்றி உண்மை தெரிந்தவர்களை எல்லாம் தொடர்ச்சியாக கொலை செய்கிறாள் காயத்ரி. ஆழப்புழா கெஸ்ட் ஹவுசில் வேலை செய்யும் சத்யாவின் கணவர் வெள்ளியங்கிரியையும் மதுவில் விஷம் கொடுத்து கொள்கிறாள். நம்பியை கடத்தியது கந்தசாமிதான் என்று போலீசிடம் பழியை போடுகிறாள்.

ரசிகர்கள் விமர்சனம்

தெய்வமகள் சீரியல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் இந்த கொலைகளைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். காயத்ரிக்கு எதிராகவும், இயக்குநருக்குக எதிராகவும் கடும் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அபத்தமான சீரியலை நிறுத்துங்கள் என்றும் கூறி வருகின்றனர்.