Breaking

Tuesday, October 11, 2016

கடற்படையில் பட்டதாரிகள் சேர்ப்பு இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

கடற்படையில் பட்டதாரிகள் சேர்ப்பு இருபாலரும் விண்ணப்பிக்கலாம்



இந்திய கடற்படையில் பட்டதாரி இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆண்- பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

கடற்படையில் அதிகாரியாக பணியாற்றுவதை இளைஞர்கள் பலரும் விரும்புகிறார்கள். தற்போது கடற்படையில் ‘கோர்ஸ் கமென்சிங்- ஜூன் 2017’ பயிற்சியின் கீழ் பல்வேறு பணிகளுக்கு பட்டதாரி இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும் லாஜிஸ்டிக்ஸ் கேடர் பிரிவு மற்றும் எஜுகேசன் பிரிவில் தகுதியானவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆண்-பெண் இருபாலரும் சேரலாம். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம்.
இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு...

வயது வரம்பு:

லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் சேருபவர்கள் 19½ வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1992 மற்றும் 2-1-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஜுகேசன் பிரிவில் சேர விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1992 மற்றும் 1-7-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக் படிப்பில் முதன்மை வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது எம்.பி.ஏ. படித்தவர்கள், பி.எஸ்சி., பி.காம், பி.எஸ்சி. (ஐ.டி.) இளநிலை படிப்புடன் நிதி, லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் போன்ற பிரிவில் முதுகலை டிப்ளமோ படித்தவர்களும், எம்.சி.ஏ., எம்.எஸ்சி. (ஐ.டி.) படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எஜுகேசன் பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், எம்.எஸ்சி. இயற்பியல், கணிதவியல், வேதியியல், எம்.ஏ. வரலாறு படித்தவர்கள் அல்லது பி.இ., பி.டெக், எம்.டெக். படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உடற்தகுதி:

ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும், பெண்கள் 152 செ.மீ. உயரம் இருந்தால் போதும், குறிப்பிட்ட அளவுக்குள் பார்வைத்திறன் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள், ஆட்சேர்க்கைக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 ஆகிய நிலைகளில் தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். ஸ்டேஜ்-1 நிலையில் நுண்ணறிவுத் திறன், படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடல் தேர்வு ஆகியவை நடைபெறும். ஸ்டேஜ்-2 தேர்வில் உளவியல் தேர்வு, குழு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அனைத்து தேர்வின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு முன்னிலை பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் சப்-லெப்டினன்ட் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இது கமாண்டர் அதிகாரி பதவி வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறத்தக்க பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 14-10-2016-ந் தேதி வரை இணையதள விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும், 2 கணினிப் பிரதிகள் எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு நகலுடன், தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து Post Box No.04, main Post Office, RK Puram, New Delhi 110066 என்ற முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் இணையதள விண்ணப்ப எண், விண்ணப்பிக்கும் பணியின் பெயர், பட்டப்படிப்பு மதிப்பெண் சதவீதம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். நகல் விண்ணப்பம் 24-10-2016-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Comment here