Breaking

Tuesday, October 11, 2016

'ரெமோ' 4 நாட்களில் ரூ.24 கோடி வசூலித்து சாதனை Remo movie collection recard

'ரெமோ' 4 நாட்களில் ரூ.24 கோடி வசூலித்து சாதனை




சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ரெமோ' 4 நாட்களில் ரூ.24 கோடி வசூல் செய்து சாதனை புரிந்திருக்கிறது.

திரை விமர்சன ரீதியில் பெரிதாக கவனிக்கப்படவில்லை எனினும், வர்த்தக ரீதியில் வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது 'ரெமோ'.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ராஜா தயாரித்திருக்கிறார்.

அக்டோபர் 7-ம் தேதி வெளியான இப்படத்தின் முதல் நாள் வசூல் 'கபாலி', 'தெறி' ஆகிய படங்களுக்குப் பின் அதிக வசூல் படமாகத் திகழ்கிறது. முதல் நாள் வசூல் மட்டும் சுமார் ரூ.7 கோடியில் இருந்து ரூ.8 கோடிக்குள் இருந்தது என விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள். இதனை தயாரிப்பு தரப்பும் உறுதிப்படுத்தியது.

மேலும், இப்படம் வெளியான 4 நாட்களில் சுமார் ரூ.24 கோடியை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள் முழுமையாக திரையரங்கில் ஒடி முடிக்கும்போது தான் ரூ.22 கோடியைத் தாண்டியது. அந்த வசூலை, 'ரெமோ' திரைப்படம் சுமார் 4 நாட்களில் கடந்து சாதனை புரிந்திருக்கிறது.

வசூல் தொடர்பாக முக்கிய விநியோகஸ்தர் ஒருவரிடம் பேசியபோது, "கண்டிப்பாக சிவகார்த்திகேயனுக்கு இது மகத்தான வெற்றிதான். இப்படம் சரியான முறையில் விநியோகம் செய்யப்பட்டது. நஷ்டம் ஏற்பட்டால் திருப்பி தரப்படும் என்ற அடிப்படையில் வேறு எந்தவொரு நடிகரின் படமும் விநியோகம் செய்யப்படவில்லை. இதுவே முதல் சாதனையாக பார்க்கிறேன்.

தீபாவளி, பொங்கல் விடுமுறையில் வெளியாகி இருந்தால் இன்னும் அதிகமாக வசூல் செய்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்த நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும், மேலும் டிக்கெட் விலையும் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது 'ரெமோ'வுக்கு டிக்கெட் விற்பனையும் சரியான விலையிலேயே விற்கப்பட்டது. அந்த விலையில் இந்த வசூல் என்றால் கண்டிப்பாக பெரிய சாதனைதான்.

தீபாவளி வரை பெரிய படங்கள் எதுவும் இல்லாததால், கண்டிப்பாக இந்த ஆண்டின் வசூல் சாதனை படங்கள் வரிசையில் 'ரெமோ' முக்கிய இடம்பெறும்" என்றார்.

'ரெமோ' படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவிருக்கிறது. இதனையும் ரெமோவை தயாரித்த ராஜாவே தயாரிக்கவிருக்கிறார்.

No comments:

Post a Comment

Comment here