எந்த தைரியத்தில் சுப்ரீம்கோர்ட் உத்தரவை மீறும் முடிவுக்கு வந்தது கர்நாடகா தெரியுமா?
பெங்களூர்: பல்வேறு ஆலோசனைகளுக்கு மத்தியில் திட்டத்தோடுதான், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடும் தண்ணீரை நிறுத்தும் முடிவுக்கு கர்நாடக அரசு வந்துள்ளது. இதில் பல லாப-நஷ்ட கணக்குகளை வைத்துக்கொண்டுள்ளது கர்நாடகா.
தண்ணீர் திறப்பை நிறுத்தினால் உச்சநீதிமன்ற கண்டிப்புக்கு ஆளாக வேண்டிவரும் என்றபபோதிலும், சட்டசபை தீர்மானத்தை ஆயுதமாக கொண்டு அதை எதிர்க்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
குடிக்கவே தண்ணீர் இல்லாத மக்களை காப்பாற்றுவது ஒரு அரசின் கடமையா அல்லது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமையா என்ற வாதத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளது அரசு.
வேண்டுமென்றே உங்கள் தீர்ப்பை மீறவில்லை என்றும், வேண்டுமானால் அடுத்த மாதம் கூடுதல் தண்ணீரை திறந்துவிட்டு கணக்கை சரி கட்டுவோம் என்று சொல்லி சுப்ரீம் கோர்ட்டை அமைதிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இதையும் மீறி ஆட்சியை கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டாலும், லாபம் என்னவோ இப்போது ஆளும் கட்சியாக உள்ள காங்கிரசுக்கு. நஷ்டமோ, அடுத்து ஆட்சியை பிடிக்க வலிமையான கட்சியாக உள்ள பாஜகவுக்குதான். மதசார்பற்ற ஜனதாதளமோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆதரவு கொடுத்து சேர்ந்து கொள்ளும்.
"காவிரிக்காக ஆட்சியையே இழந்தது காங்கிரஸ் கட்சி..", "முதல்வர் சித்தராமையா தனது பதவியை பெரிதாக நினைக்காமல் மக்களுக்காக பதவியை தியாகம் செய்தார்.." "பாஜகவோ (மத்திய அரசு) ஆட்சியை கலைத்துவிட்டது" என்றெல்லாம் நெஞ்சுருக பிரசாரம் செய்து மக்களிடம் உள்ள உணர்ச்சிகர நிலையை வாக்குகளாக அறுவடை செய்வது காங்கிரசுக்கு எளிது.
இந்த விஷயத்தில் பாஜகவை எதிரியாக காட்டி, தனிமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறது காங்கிரஸ். அதற்காக மதசார்பற்ற ஜனதாதளத்தையும் கூட்டு சேர்த்துக்கொண்டுள்ளது. தேவகவுடாவை நேற்று சித்தராமையா நேரில் சந்தித்ததே கூட்டணியை உறுதி செய்யத்தான் என்கிறார்கள்.
இதற்கேற்பத்தான், தேவகவுடா கட்சியினரும், இப்போது கொடுக்கும் பேட்டிகளில் முழுக்க மோடியையும், எடியூரப்பாவையும், பாஜகவையும் தாக்கி பேசிவருகிறார்கள். மீடியாக்களும், பாஜக மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளன. ஏனெனில் மத்திய அரசு உதவி கர்நாடகாவுக்கு இப்போது கட்டாயமாக தேவைப்படுகிறது.
எனவே, எப்படிப்பார்த்தாலும் கிடைத்த வாய்ப்பை லாபகரமாக பயன்படுத்தும் கணக்குகள் காங்கிரஸ் அரசிடம் குவிந்து கிடக்கின்றன. அனைத்தையும் ஆலோசித்தே அடுத்தகட்ட நடவடிக்கைக்கு முன்னேறியுள்ளது கர்நாடக அரசு என்கிறார்கள்.
No comments:
Post a Comment
Comment here