Breaking

Saturday, August 13, 2016

குறைந்த செலவில் மேற்கூரை அமைக்கலாம்

குறைந்த செலவில் மேற்கூரை அமைக்கலாம்



பழைய காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் கூரை அமைக்க ஓடுகள் முதன்மையான கட்டுமான பொருளாக இருந்தது. அதன் விலை மற்றும் அமைப்பதற்கான மனித உழைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்று பொருட்களின் தேவைக்கு அவசியம் ஏற்பட்டது. தொழில் நுட்ப வளர்ச்சிகள் காரணமாக கல்நார் அட்டைகள் மற்றும் சிமெண்டு அட்டைகள் ஓடுகளுக்கு மாற்றாக கண்டறியப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தன. விலை குறைவு மற்றும் எளிதான பராமரிப்பு காரணமாக அவை பெரிய அளவில் தேவைப்படும் பொருட்களாக மாறியிருக்கின்றன.

சிமெண்டு அட்டைகள்

ஓடுகள் பயன்படுத்தப்படுவது ‘ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்’ என்று சொல்லப்படும் சிமெண்டு அட்டைகள் வந்த பிறகு குறைந்து இருக்கிறது. ஓடுகளுக்கு ஆகும் செலவில் பாதிக்கும் மேலாக மிச்சப்படுத்த முடியும் என்ற காரணத்தால் அவை விரைவில் முக்கியமான இடத்தை பிடித்தன. கான்கிரீட் கூரைகள் கொண்ட கட்டிடமாக இருந்தாலும் மேல்மாடியில் அமைக்கப்படும் கூரை சிமெண்டு ஷீட் கொண்டு அமைக்கப்படும் வழக்கம் வந்தது. வீடுகளுக்கு மட்டுமல்லாமல் தொழிற்சாலைகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கும் அதன் உபயோகம் விரைவில் நடைமுறைக்கு வந்துள்ளது.

குறைபாடுகள்

சிமெண்டு கூரைகள் மற்றும் கல்நார் கூரைகள் வெப்பத்தை பிரதிபலிக்கும் தன்மை இல்லாதவை. சூரிய வெப்பத்தை தமக்குள் ஈர்த்துக்கொண்டு நிதானமாக வெளிப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருப்பதால் கட்டிடத்திற்கு உள்ளே வெப்ப நிலை அதிகமாவது தடுக்க முடியாததாக மாறிவிட்டது. அதற்காக வெப்ப தடுப்பு பூச்சுகள் அல்லது ‘பால்ஸ் சீலிங்’ போன்ற முறைகளை கையாண்டு அறையின் வெப்ப நிலை அதிகமாவதை தடுக்க வேண்டியதாக இருக்கும்.

புதிய தொழில்நுட்பம்

சிமெண்டு அட்டைகள் மற்றும் கல்நார் அட்டைகளை விடவும் விலை மற்றும் எடை குறைவாக இருக்கும் கூரை அமைப்புகளை உருவாக்கும் தொழில்நுட்பங்கள் புதியதாக இப்போது கண்டறியப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல்வேறு நுட்பமான முறைகள் இப்போது நடைமுறையில் உள்ளன. அவற்றில் ‘சிலிகான் பாலி கார்பனேட்’ கூரைகள் என்ற புதிய அணுகுமுறையானது முக்கியமான இடத்தில் உள்ளது.

கட்டுமான பொருட்களில் மாற்று முறைகளை தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் செலவு, கையாள்வதில் இருக்கும் எளிமை, வெப்ப அலைகளால் பாதிக்கப்படாத தன்மை போன்ற பல அம்சங்கள் கவனிக்கப்படுகின்றன. அவ்வகையில் ‘சிலிக்கன் பாலி கார்பனேட்’ வகை கூரைகள் பொருத்தமாக உள்ளன.

கையாள்வது எளிது

உறுதியாகவும், எடையை தாங்கக்கூடிய தன்மை உடையதாகவும் இருக்கும் இவ்வகை ‘ஷீட்களை’ கூரைகளில் பொருத்துவதும், பிரித்து எடுப்பதும் சுலபமானதாக இருக்கிறது. முக்கியமாக எடை குறைவான தன்மை கொண்டதால் கட்டமைப்புகள் மீது எடை சுமத்துவது குறைக்கப்படுகிறது. மற்ற வகை கூரைகளோடு ஒப்பிடும்போது நல்ல உறுதியான தன்மை கொண்டதாக உள்ளது. துருப்பிடிக்கும் தன்மை என்பது இதில் கிடையாது. ‘பாலிகார்பனேட்’ பொருட்கள் 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தை தாங்கக்கூடியவை. அதனால் தீயினால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பான கூரையாக இருக்கும்.

சிறந்த மாற்றுப்பொருள்

நமது பகுதிக்கு அருகாமையிலேயே தயார் செய்யப்படுவதால் வாங்குவது சுலபமாக இருக்கும். கட்டமைப்பில் கண்ணாடிகள், ‘பிளாஸ்டிக் ஷீட்டுகள்’, ‘ஜிப்சம்’ போன்ற பொருட்கள் பயன்படுத்தும் இடங்களில் ‘சிலிகான் பாலிகார்பனேட்’ பயன்படுத்துவது செலவு குறைவான அணுகுமுறையாக இருக்கும். அதனால் கட்டுமான பொருட்களில் குறிப்பிடத்தக்க மாற்று முறையாக இவை உள்ளன.

No comments:

Post a Comment

Comment here