Breaking

Wednesday, August 24, 2016

திருவண்ணாமலையில் 10 ஆண்டுகளாக பல ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த கொடூரம்

திருவண்ணாமலையில் 10 ஆண்டுகளாக பல ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த கொடூரம்



திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அவுல்காரத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கருக்கலைப்பு மையம் இயங்கி வருவதாகவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதாகவும் சென்னை மருத்துவ ஊரக நலப்பணிகள் துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து மருத்துவ ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் குருநாதன், உதவி கமிஷனர் நரசிம்மன், கண்காணிப்பாளர் கமலகண்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவினர் திருவண்ணாமலைக்கு வந்தனர்.

திருவண்ணாமலை மருத்துவ இணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் போலீசாருடன் அவுல்காரத் தெருவிற்கு சென்று அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு அடுக்குமாடி வீட்டின் மேல்மாடியில் 10 பெண்கள் இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சிறப்பு மருத்துவ குழுவினர் அவர்களிடம் விசாரித்தபோது 5 பெண்கள் கருக்கலைக்க வந்ததும், அவர்களுடன் உறவினர்கள் 5 பேர் வந்ததும், கருகலைக்க வந்தவர்களில் 3 பேருக்கு வலி ஏற்படுவதற்கான ஊசி, மாத்திரை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திலகவதி என்கிற ஆனந்தி (வயது46) என்பதும், அவருடைய கணவர் தமிழ்செல்வன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணிபுரிவதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவ குழுவினர் அந்த வீட்டில் சோதனை நடத்தியதில், வீட்டின் பல இடங்களில் கருக்கலைப்பு செய்யக்கூடிய மருந்து, மாத்திரைகள் இருந்தது. மேலும் வீட்டில் உள்ள ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையை திறக்கும்படி அதிகாரிகள் திலகவதியிடம் கூறினர். அந்த அறை தனது கணவரின் அறை என்றும், அறையின் சாவி தன்னிடம் இல்லை என்றும் கூறினார்.

அப்போது கருக் கலைப்புக்காக ஊசி மற்றும் மாத்திரை கொடுக்கப்பட்ட பெண்கள் 3 பேரும் வலியால் துடித்தனர். இதுகுறித்து அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகப்பேறு சிறப்பு மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஊசி, மாத்திரை கொடுக்கப்பட்ட பெண்களை பரிசோதனை செய்தனர். பின்னர் 5 பேருக்கும் சிகிச்சை அளிக்க திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் பூட்டப்பட்டிருந்த அறைக்கதவை திறக்க சாவி தயார் செய்யும் நபர் அங்கு வரவழைக்கப்பட்டார். அதிகாரிகள் முன்னிலையில் சாவி தயார் செய்யப்பட்டு கதவு திறக்கப்பட்டது.
அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் கருவி இருப்பது தெரியவந்தது. மேலும் அங்கு ஏராளமான மருந்து, மாத்திரைகள் மற்றும் பல லட்சம் மதிப்பிலான வைப்பு தொகை பத்திரங்கள், பல்வேறு வங்கி கணக்கு புத்தகங்கள் இருந்தது. வங்கி கணக்கில் ஏராளமான பணம் உள்ளது.
இதுகுறித்து திலகவதியிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மருத்துவ குழுவினர் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் கருவி, பல லட்சம் மதிப்பிலான வைப்பு தொகை பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை மருத்துவ இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறுகையில் திலகவதி இதுபோன்று ஏற்கனவே சிகிச்சை அளித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னரும் வீட்டில் முறைகேடாக கருக்கலைப்பு செய்து வந்துள்ளார். வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வைப்பு தொகை பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் போலீசார் மூலமாக கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். முறைகேடாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த திலகவதியை போலீசாரிடம் ஒப்படைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதையடுத்து திலகவதியை போலீசார் கைது செய்தனர். அவரது கணவரை தேடி வருகின்றனர். கருகலைப்பு மையத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Comment here