Breaking

Wednesday, August 3, 2016

கும்ப ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் (02.08.2016) முதல் (01.09.2017) வரை

கும்ப ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் (02.08.2016) முதல் (01.09.2017) வரை



கும்பம்

அவிட்டம் 3,4 பாதம் 72% சதயம் 85% பூரட்டாதி 1,2,3-ம் பாதம் 77%

மறப்போம், மன்னிப்போம் என்ற குணம் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு குடும்பத்தில் சந்தோஷத்தையும், பதவி, பட்டத்தையும் தந்த குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும் என்றாலும் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் பிரச்சினைகள் வெகுவாக குறையும். கடன் பிரச்சினைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். வேற்றுமதம், மாநிலம் மற்றும் மொழியினரின் ஆதரவுக் கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் தற்சமயம் உங்களுக்கு உதவ வாய்ப்பிருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குரு பகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால்

பணவரவு திருப்திகரமாக இருக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். அறிவுப் பூர்வமானப் பேச்சால் அனைவரின் இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். குருபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்ப்புகள் குறையும். வருங்காலத் திட்டமெல்லாம் தீட்டுவீர்கள். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆனால் எட்டாம் வீட்டில் குரு அமர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள்.

கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு வீணாக சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, பிரேக் ஓயர் சரியாக இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்வது நல்லது. அவ்வப்போது கோபப்படுவீர்கள். பலவீனமாக இருப்பதாக சில நேரங்களில் உணருவீர்கள். பிள்ளைகளிடம் அவ்வப்போது குறைகளை கண்டுப்பிடித்து வருத்தமடைவீர்கள். நிறைகளையும் பாராட்டத் தயங்காதீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்வது நல்லது. வீட்டில் களவு போக வாய்ப்பிருக்கிறது. நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல் விலகும். அடகிலிருந்த நகைகள், பத்திங்களை மீட்க உதவிகள் கிட்டும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது நல்லது. நேரம் தவறி சாப்பிட வேண்டி வரும். சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் வீட்டில் தடைப்பட்டு வந்த திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். வழக்கு சாதகமாகும். 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 9-ம் வீட்டில் குரு நுழைவதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கு சிலர் உதவுவதாக சொல்லி உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆன்மித்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும். எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கூட போராடிப் பெற வேண்டி வரும்.

இந்த குருப்பெயர்ச்சி ஒரு பக்கம் பணவரவையும், மறுபக்கம் கூடுதல் செலவுகளையும் தருவதாக அமையும்.

No comments:

Post a Comment

Comment here