கட்டிடங்களில் ஏறுகிறார் தீயில் விளையாடுகிறார்.. எதிரிகளை பந்தாடுகிறார் உயிரை பணயம்வைக்கும் அதிரடி வீரர்
சதீஷ் வயது 26 பார்த்தால் சாதாரணமாக தெரியும் இவர், பெரிய கட்டிடங்களை பார்த்தால் உடும்புபோல் சரசரவென்று அதில் ஏறி உச்சிக்கு போகிறார். கொழுந்துவிட்டெரியும் தீக்குள் புகுந்து விளையாடுகிறார். மார்பை கல்லாக்கிக்கொண்டு ஈட்டியை வளைக்கிறார். உலகிலே ஆபத்தான சண்டையாக வர்ணிக்கப்படும் ‘மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்’ சண்டையில் கலந்துகொண்டு எதிரிகளை அடித்து துவைக்கிறார்.
‘உங்களுக்கு உயிர் மீது ஆசை இல்லையா?’ என்று கேட்டால், ‘‘எனக்கு உயிரைவிட மேலானது, தன்னம்பிக்கை. அதன் மூலம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்’’ என்கிறார். இவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர். இவருடைய பெற்றோர்: பாண்டியன்–மல்லிகா.
சதீஷ் குத்துச்சண்டையில் முரட்டுத்தனமாக மோதும் மிக்ஸ்டு மார்ஷல் ஆர்ட், மோய்தாய் போட்டிகளில் எதிரிகளை ‘நாக் அவுட்’ செய்யும் வித்தையில் கைதேர்ந்தவர். அமெச்சூர், புரொபஷனல் என இரு பிரிவுகளிலும் அசத்திக்கொண்டிருக்கிறார். அசாம் மற்றும் சென்னையில் நடந்த தேசிய அளவிலான அமெச்சூர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட், மோய்தாய் பாக்சிங் புரொபஷனல் போட்டியில் தேசிய சீனியர் பிரிவில் கலந்துகொண்டு, சாம்பியன் பட்டம் வென்ற ஒரே தமிழக வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனைகளுக்காக சதீஷ் சந்தித்த சவால்கள் என்னென்ன?
‘‘அசாமில் நடந்த தேசிய அமெச்சூர் போட்டியில் தங்கப்
பதக்கம் வென்றபோது அங்கு நடந்த மோய்தாய் புரொபஷனல் போட்டியிலும் கலந்து கொண்டேன். அமெச்சூர் போட்டியில் விதிமுறைகளை கடைப்பிடித்து எதிரிகளை வீழ்த்தவேண்டும். புரொபஷனல் போட்டி அப்படிப்பட்டதல்ல. எந்த விதிமுறையும் கிடையாது. எதிரி கீழே விழும் வரை எப்படி வேண்டுமானாலும் அடித்து நொறுக்கலாம். அதனால் மோதல் முரட்டுத்தனமாக இருக்கும். எதிரியிடமிருந்து தற்காத்து கொள்வது சவாலானது. சட்டென்று சுதாரிப்பதற்குள் எங்கு குத்து விழும் என்று தெரியாது. அதனால் உடல் பலத்தை மட்டும் நம்பி களம் இறங்க முடியாது. மனதையும், உடலையும் ஒருநிலைபடுத்தி போராடினால்தான் வெற்றி கிடைக்கும்.
நான் இறுதி போட்டியில் மணிப்பூர் வீரரை எதிர்கொண்டேன். அவர் தன்னுடன் மோதியவர்களை மூர்க்கத்தனமாக தாக்கி வெற்றி பெற்றவர். அவர் மிகவும் முரட்டு சுபாவம் கொண்டவர் என்றார்கள். நான் அதையெல்லாம் கவனத்தில்கொள்ளாமல் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு களம் இறங்கினேன். அவருடனான மோதல் கடுமையாக இருந்தது. எனினும் 90–வது நொடியிலேயே அவரை வீழ்த்தி வெற்றி பெற்றேன்.
அவரிடம் தகுதி சுற்று போட்டியில் கடுமையாக குத்து வாங்கி தோற்று படுகாயம் அடைந்த வீரர் ஒருவர் என்னிடம், ‘நீங்கள் அவரை அடித்து வீழ்த்தியதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். ஏன் என்றால் நான் அவருடன் தோற்று கீழே வீழ்ந்த பிறகும் மனிதாபிமானம் இல்லாமல் என்னை முரட்டுத்தனமாக தாக்கினார். விட்டுவிடுமாறு நான் கெஞ்சிய பிறகும் அடித்து நொறுக்கினார். ஆணவம் கொண்ட அவரை நீங்கள் அடக்கிவிட்டீர்கள்’ என்று மகிழ்ந்தார்.
அதுபோல் பெங்களூருவில் நடந்த போட்டியும் மறக்க முடியாதது. அங்கு நடந்த
சர்வதேச அளவிலான மோய்தாய் புரொபஷனல் போட்டி அரை இறுதியில் ஈரான் நாட்டு
வீரருடன் மோதினேன். அவர் 9 வயதிலேயே ஜூனியர் போட்டியில் 300 வெற்றிகளை
பெற்றவர். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கு பெற்றவர். அவர் தகுதி சுற்றில்,
ஐந்து முறை உலக சாம்பியனான இந்திய வீரரை வீழ்த்தி இருந்தார். அதனால் அரை
இறுதியில் அவருடன் நான் மோதுவது போட்டியை காண வந்தவர்களிடையே எதிர்பார்ப்பை
அதிகரித்துவிட்டது. என் பெயரை கூறி, வாழ்த்து கோஷம் எழுப்பிக்கொண்டே
இருந்தார்கள். நான் அவரை களத்தில் எதிர்கொண்டு ‘நாக் அவுட்’ செய்து வெற்றி
பெற்றேன். உடனே ரசிகர்கள் என்னை தோள்மேல் தூக்கி வைத்துக்கொண்டு உற்சாக
கோஷம் எழுப்பினார்கள்’’ என்றார்.
சதீஷ் கராத்தே,
டேக்வாண்டோ, ஜூடோ, ஜூஜிட்சூ, கிக் பாக்சிங் ஆகியவற்றில் பிளாக் பெல்ட்
வாங்கியவர். மல்யுத்த வீரராகவும் வலம் வருகிறார். தமிழர்களின் தற்காப்பு
கலைகளான சிலம்பம், வர்மம் போன்றவற்றையும் ஆர்வமுடன் கற்று வருகிறார். அவை
குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு பக்கபலமாக இருப்பதாக
கூறுகிறார்.
‘‘எனக்கு தமிழக தற்காப்பு கலைகள்
மீது ஆர்வம் அதிகம். சிலம்பத்திலும் சிறந்து விளங்குகிறேன். அதில்
இருக்கும் குத்து வரிசை, பிடி வரிசை, காலடி வரிசை, ஆயுத வரிசை போன்றவை
குத்துச்சண்டையோடு தொடர்புடையவை. வெளிநாட்டு தற்காப்பு கலைகளில் இருக்கும்
அத்தனை சிறப்பம்சங்களும் தமிழக தற்காப்பு கலைகளில் இருக்கிறது. நான்
வெளிநாட்டு கலைகளை கற்றுக்கொண்டாலும் அதன் மூலம் தமிழக தற்காப்பு கலைகளை
உலக அளவில் பரப்புவதே என் நோக்கம்’’ என்கிறார், சதீஷ்.
தற்காப்பு கலைகளை பெண்களும், ஆண்களும் கற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்று கூறும் இவர், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.
‘‘தற்காப்பு
கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த
விஷயத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் போர்க்குணமிக்கவர்களாக மாறலாம்.
எப்போதும் விழிப்புடனும் இருப்போம். தனிமையில் செல்லும்போது பய உணர்வு
இருக்காது. எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளும் மனவலிமை கிடைக்கும். நாம்
தனியாக நிற்கும்போது யாரும் ஓடிவந்து வெட்டிவிட்டு தப்ப முடியாது’’ என்று
விளக்கம் தரும் இவர், தான் வெற்றிக்கு நிகராக நிறைய தோல்விகளையும்
சந்தித்திருப்பதாக சொல்கிறார். அவை ஒவ்வொன்றும் தனக்கு சிறந்த அனுபவம்
என்றும் கூறுகிறார்.
சதீஷ், ஸ்ரீசாய்ராம்
என்ஜினீயரிங் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர். தஞ்சாவூரில் மரபு வழி
மருத்துவ டிப்ளமோ படிப்பும் படித்திருக்கிறார். யோகா, உடல் ஆரோக்கியம்
சார்ந்த ஜிம் பயிற்சி படிப்புகளையும் கற்று தேர்ந்திருக்கிறார்.
டி.வி.யிலும் நேரடியாக சாகச நிகழ்ச்சிகள் செய்து காட்டியுள்ளார்.
‘‘சர்வதேச
அளவில் சிறந்த வீரராக விளங்கி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்க
வேண்டும் என்பதே என் லட்சியம். நான் கற்றிருக்கும் விளையாட்டு மூலம் தமிழக
கலையான வர்ம கலையை பரப்ப வேண்டும் என்பதையும் லட்சியமாக கொண்டிருக்கிறேன்.
நிறைய
பேர் திருமணத்திற்கு பிறகு விளையாடுவதை விட்டு விடுகிறார்கள். அதற்கு
குடும்ப சூழ்நிலையை காரணம் சொன்னாலும் வெளிநாடுகளில் திருமணத்திற்கு
பிறகும் குடும்பத்தினர் விளையாடுவதற்கு ஊக்குவிக்கிறார்கள். ஆனால் இங்குள்ள
மக்களின் மனநிலை அப்படி இருப்பதில்லை. ‘குடும்பத்தை கவனிப்பதை
விட்டுவிட்டு விளையாட்டு, விளையாட்டுன்னு இருக்கிறீயே?’ என்பதைத்தான்
பெரும்பாலானோரின் மனநிலை பிரதிபலிக்கிறது. அந்த நிலை மாற வேண்டும். எனது
வீட்டில் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்கள். அதனால் என்
விளையாட்டு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
இப்போது விளையாட்டின் மீதே முழு கவனத்தை செலுத்துவதால் திருமணத்தை பற்றி
இதுவரை சிந்திக்கவில்லை’’ என்கிறார், சதீஷ். இவர் சென்னை
விருகம்பாக்கத்தில் மாணவ– மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்கிறார்.
சதீஷ்
கடந்த ஆண்டு புனேவில் நடந்த ஆசியன் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப்
போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது பிரபல குத்துச்சண்டை வீராங்கனை
மேரிகோமை சந்தித்திருக்கிறார்.
‘‘அவர்
எளிமையானவர். ‘தான் சிறந்த வீராங்கனை’ என்ற கர்வம் இன்றி சக வீரர்,
வீராங்கனைகளிடம் பழகுபவர்’’ என்கிறார். அப்போது நடந்த போட்டியில் சதீஷ்
வெண்கலப் பதக்கம் வாங்கி இருக்கிறார். இந்த ஆண்டு ரஷ்யாவில் நடக்க
இருக்கும் உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற
இருக்கிறார். இந்தியா முழுவதும் உள்ள தற்காப்பு கலைகளை தொகுத்து குறும்படம்
ஒன்றும் தயார் செய்துள்ளார்.
No comments:
Post a Comment
Comment here