Breaking

Tuesday, July 12, 2016

இட்டமொழியில் அதிசய ‘அனுமான் குரங்கு’ பொதுமக்கள் திரண்டு வேடிக்கை பார்த்து வருகிறார்கள்

இட்டமொழியில் அதிசய ‘அனுமான் குரங்கு’ பொதுமக்கள் திரண்டு வேடிக்கை பார்த்து வருகிறார்கள்




இட்டமொழியில் நேற்று முதல் அதிசய ‘அனுமான் குரங்கு’ நடமாடி வருகிறது. பொதுமக்கள் திரண்டு குரங்கை வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

அதிசய குரங்கு

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள களக்காடு, பாபநாசம், குற்றாலம் பகுதிகளில் பல்வேறு ரக குரங்குகள் நடமாடி வருகின்றன. களக்காடு பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன.

மலைப்பகுதியில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள நெல்லை மாவட்டம் இட்டமொழியில் நேற்று காலையில் அதிசய குரங்கு ஒன்று நடமாடியது. காலையில் அங்குள்ள அரசு மதுபானக் கடையை ஒட்டியுள்ள பார் பகுதியில் நின்றது. பார் நடத்தும் செந்தில்முருகன் என்பவர் குரங்கை பார்த்த போது, வித்தியாசமாக இருந்தது. இதுவரை இட்டமொழிக்கு குரங்கு ஏதும் வந்ததில்லை. அத்துடன், வித்தியாசமாக இருந்த அந்த குரங்கு கடித்து விடுமோ என்ற அச்சத்தில் அவர், சிறிதுநேரம் தூரத்தில் நின்று கவனித்துள்ளார். அவரை ஏக்கத்துடன் அந்த குரங்கு பார்த்துள்ளது.

காய்கறி கொறித்தது

உடனடியாக அவர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொண்டு வந்து வைத்துள்ளார். தண்ணீரை குடித்த குரங்கு, அங்கிருந்து தாவிக் குதித்து பஜாருக்குச் சென்றது. வித்தியாசமான முகதோற்றத்தில் இருந்த அந்த குரங்கை பார்க்க ஏராளமான பொதுமக்கள் பஜாரில் கூடினர். பொதுமக்கள் கூட்டத்தை கண்டும் குரங்கு அச்சப்படவில்லை. பொதுமக்களுக்கு தொந்தரவும் செய்யவில்லை. பஜாரில் சுற்றிய அந்த குரங்கு, காய்கறி கடைக்குள் சென்றது.

கடைக்காரரும் குரங்கை அதிசயமாக பார்த்தார். அங்கும் பொதுமக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தார்கள். சிலர் குரங்கை செல்போனில் படம் பிடித்தார்கள். குரங்கு கடையில் இருந்த கத்தரிக்காய், தக்காளி, அவரைக்காய் என விதவிதமான காய்கறிகளை கொறித்தது. வயிறு நிரம்பியவுடன் கடையில் இருந்து கிளம்பிய குரங்கு, அப்பகுதியில் இருந்து பெரிய மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது.

இந்த குரங்கு பற்றி அறிந்த பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் இட்டமொழிக்கு வந்து குரங்கை அதிசயமாக பார்த்துச் சென்றார்கள். இது ‘அனுமான் குரங்கு’ என்று கூறப்படுகிறது. பெண் குரங்கான அது, எங்கிருந்து தப்பி வந்தது என தெரியவில்லை.

நெல்லை மாவட்ட பகுதியில் இந்த வகை குரங்கு இதுவரை தென்பட்டதில்லை என கூறப்படுகிறது. இரவில் சில வீடு பகுதிகளுக்குச் சென்ற அந்த குரங்குக்கு உணவு கொடுத்தனர். அவற்றை உண்டு விட்டு மரத்தில் ஏறிக் கொண்டது.

No comments:

Post a Comment

Comment here