Breaking

Tuesday, July 12, 2016

குஜராத்தில் வாலிபர்கள் தடிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம், 3 பேர் கைது

குஜராத்தில் வாலிபர்கள் தடிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம், 3 பேர் கைது



குஜராத்தில் இறந்த பசுமாட்டின் தோலை உரித்த வாலிபர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் போலீசார் 3 பேரை கைது செய்து உள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தின் மோட்டா சமதியாரா கிராமத்தில் ஏற்கனவே இறந்த பசுமாட்டின் தோலை உரித்த வாலிபர்களை 6 பேர் கொண்ட கொடூர கும்பல் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வாலிபர்களை காரில் கட்டிவைத்து 6 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பிகள் மற்றும் தடிகளை கொண்டு கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இதனை ஆய்வு செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயம் அடைந்தவர்களில் இருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பாதிக்கப்பட்ட வாலிபர்கள் ஏற்கனவே இறந்த பசுமாட்டின் தோலை உரித்து உள்ளனர், ஆனால் அவர்கள் பசுமாட்டை கொன்று உள்ளனர் என்று கொடூர கும்பல் தாக்கிஉள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி கே.எம்.ஜோஷி பேசுகையில், “இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளோம், 3 பேர் தலைமறைவாகியுள்ளனர். பசு ஏற்கெனவே இறந்து போனதா அல்லது தோலுக்காக கொல்லப்பட்டதா என்பதை அறிய தடயவியல் நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை நடந்தது” என்றார். உனா போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ள முதல் தகவல் அறிக்கையின் படி வாலிபர்களை கொடூரமான முறையில் தாக்கியவர்கள் பல்வந்த் சிமர், ரமேஷ் பக்வான், ரமேஷ் கிரி, ராகேஷ் ஜோஷி, ரசிக்பாய் மற்றும் நாக்ஜி பாய் வானியா ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் ரமேஷ், ராகேஷ், நாக்ஜி பாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எஸ்.சி/எஸ்.டி-க்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Comment here