போலீஸ் டி.ஜி.பி., கமிஷனர் நேரடி ஆய்வு: பெண் என்ஜினீயர் கொலை வழக்கு சென்னை போலீசுக்கு மாற்றம் கொலைகாரன் யார்? புதிய தகவல்கள்
பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கு ரெயில்வே போலீசிடம் இருந்து சென்னை போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து போலீஸ் டி.ஜி.பி.–கமிஷனர் நேரடி ஆய்வில் இறங்கி உள்ளனர். கொலைகாரன் யார்? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
விசாரணை மாற்றம்
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு தமிழக சட்டம்–ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமாரும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனும் நேரடியாக சென்று வழக்கின் தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களுடன் உயர் போலீஸ் அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
இந்த வழக்கை தற்போது எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள். போலீஸ் சட்டவிதிகளின்படி, ரெயில் நிலையங்களில் நடக்கும் கோடூர சம்பவங்கள் பற்றிய விசாரணையை உள்ளூர் போலீசார் தான், விசாரிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
அந்த அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை எழும்பூர் ரெயில்வே போலீசாரிடம் இருந்து, நுங்கம்பாக்கம் போலீசாருக்கு நேற்று மாற்றப்பட்டது.
3 தனிப்படைகள்
இந்த வழக்கு தொடர்பாக சென்னை நகர உயர் போலீஸ் அதிகாரி கூறியதாவது:–
நுங்கம்பாக்கம் போலீசுக்கு சுவாதி கொலை வழக்கு மாற்றப்பட்டு உள்ளதால், கொலைகாரனை கைது செய்ய திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பெருமாள், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டு உள்ளனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள கொலைகாரன் என்று சந்தேகப்படும் மர்ம வாலிபரின் படம் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதுவரை நடந்த விசாரணையில் அந்த மர்ம வாலிபர் தான், கொலைகாரனாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். கொலைகாரன் யார்? என்பது பற்றியும் உறுதியான சில தகவல்கள் கிடைத்துள்ளது.
விரைவில் பிடித்துவிடுவோம்
கொலைகாரன் தப்பிவிடக்கூடும் என்பதால், அந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. கொலைகாரனை கைது செய்யும் பணி இரவு–பகலாக தொடர்ந்து நடக்கும். தற்போதைய விசாரணையில் காதல் பிரச்சினை தான், கொலைக்கு காரணமாக இருக்கும் என்று சந்தேகப்படுகிறோம். கொலைகாரன் பிடிபட்ட பிறகு உண்மை நிலவரம் தெரிய வரும். கொலைகாரனை விரைவில் பிடித்துவிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
Comment here