நாளை அன்னையர் தினம் அன்னையைப் போற்றுவோம்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாற்றுக்கிழமையை அன்னையர் தினமாக உலகம்
முழுவதும் கொண்டாடுகிறார்கள். கடந்த நூறண்டுகளாக அன்னையர்
தினக்கொண்டாட்டம் பழக்கத்தில் உள்ளது. ஆனால் அம்மாவை உண்மையிலேயே
நேசிப்பவர்களுக்கு தினம், தினம் கொண்டாட்டம்தான்.
அம்மா.. கடவுள் நமக்கு கொடுத்த பரிசு. கடவுள் எல்லா இடங்களிலும் தோன்ற
இயலாது என்பதால்தான் அன்னையைப் படைத்தான் என்று யூத பழமொழி சொல்கிறது.
ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டபோது தன் அன்னையைப் பற்றித்தான் நினைத்தார்
என்று குறிப்புகள் உள்ளது. ஆக.... அம்மா என்பவள் ஆண்டவனே என்பது துல்லியமாக
உணர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் நிறைய பேர் அதை புரிந்து கொள்ளாமல், 10 மாதம் சுமந்து பெற்ற தாய்க்கு
மரியாதையும், மகிழ்ச்சியும் கொடுக்காமல் கோவில், கோவிலாக ஏறி, இறங்கிக்
கொண்டிருக்கிறார்கள். “தாயை வணங்கு. இறைவனை வணங்குவதை விட தாயை வணங்குவதே
பெரும் புண்ணியம்” என்று கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார். ஒரே ஒரு நிமிடம்
நமக்காக அம்மா பட்ட கஷ்டங்களை நினைத்துப் பாருங்கள். உள்ளம் உருகி விடும்.
அம்மா ஊட்டிய உணவை இப்போது நினைத்தாலும் தித்திக்கும். அம்மா தந்தது 10
பைசாவானாலும் அது லட்சம், கோடிகளுக்கு இணையாகாது. அத்தகைய கண்கண்ட தெய்வமான
அம்மாவுக்கு நாம் என்ன கைமாறு செய்கிறோம்?
எதுவுமே செய்யவில்லை என்றால் நீங்கள் மனிதனே அல்ல. தாய் எதையும்
எதிர்பார்க்க மாட்டாள். அவள் அன்பு இணையில்லாதது. விலைபேச முடியாதது.
என்றாலும் அன்னையை மனம் குளிர செய்ய வேண்டியது நம் கடமை அல்லாவா? அந்த கடமை
எப்படி அமைய வேண்டும் என்பதை மாலைமலர் மருத்துவர் கமலிஸ்ரீபால் அவர்கள்
தாய் பாசத்தோடு நேசத்தையும் கலந்து வரிகளாக வடித்து கொடுத்துள்ளார்.
படித்தால்...... பெற்ற தாயை பொக்கிஷமாக கருதி போற்றுவீர்கள்.
நாளை அன்னையர் தினம். தாய்மையை போற்றும் தினம். உலகிலுள்ள அனைத்து
தாய்மார்களையும் போற்றும் தினம். வெளிநாடுகளில் அவர்களது வாழ்க்கை முறை நம்
நாட்டு முறையினைக் காட்டிலும் சற்று வித்தியாசமானது. ஒரு குறிப்பிட்ட
வயதிற்குப் பிறகு பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் தங்குவதில்லை. இது அங்கு
அநேகமாக நடக்கின்றது. பெற்றோர்களும் தங்கள் முதுமைக் காலத்தினை தானே எதிர்
கொள்கின்றனர்.
இதனால் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே அங்கே அன்பு குறைவு என்று
எடை போடக்கூடாது. வேகமான வாழ்க்கை நிலையில் வருடமொரு முறை ‘அன்னையர்
தினம்’, ‘தந்தையர் தினம்’ என்று உருவாக்கி குடும்பத்தோடு அவர்களை சந்தித்து
தன் அன்பினை தெரிவிப்பார். இது அவர்கள் வாழ்வு முறை.
நம் வாழ்க்கை முறைவேறு. நம் நாட்டினையும், நீரினையும் கூட பெண்ணாக, தாயாக
பார்க்கும் உயர் கலாச்சாரம் நம் ரத்த அணுக்களில் ஏற்றப்பட்டு உள்ளது.
மேலும் இங்கு எந்த தாயாவது 18 வயதில் பெண்ணையோ, பிள்ளையையோ அவர்கள்
சம்பாதித்து தனித்து இருக்கட்டும் என்று விட்டு விடுவாளா என்ன? தன் கணவனை
உலுக்கி எடுத்து விட மாட்டாளா என்ன? தன் பிள்ளைக்கு உலக மகா கொடுமை
நிகழ்ந்து விட்டதாக கதறி விடுவாளே.
ஆக உலகெங்கும் ‘அன்னையர் தினம்’ என்பது 18 வயது வரை பொறுப்போடு
குழந்தைகளைப் பார்க்கும் தாய் மார்களை இவ்வளவு போற்றுகின்றது என்றால்
பிள்ளைக்கு 60 வயது ஆனாலும் என் பிள்ளை என போற்றும் 80 வயது தாய் மார்களை
வருடத்தில் ஒருநாள் நாம் பாராட்டினால் போதுமா என்று தான் தோன்றுகின்றது.
இன்று பெருகி வரும் முதியோர் இல்லங்களைப் பார்க்கும் பொழுது நெஞ்சு
பதைபதைக் கின்றது. கண்ணில் ரத்தம் வருகின்றது. இது காலத்தின் கோலமோ?
முதியோர் இல்லங்கள் அதிகரித்து விடுமோ என்ற பயம் வருகின்றது. எனவே
‘அன்னையர் தினத்தினை’ கூடுதல் கவனம் செலுத்தி இதன் முக்கியத்துவத்தினை இளைய
சமுதாயத்தினை உணரச் செய்ய வேண்டும் என்று தோன்றுகின்றது.
எல்லோருக் கும் அவர்களின் தாய் உலகத்திலேயே சூப்பர் தான். நாம் செய்யும்
அனைத்துப் பணிகளும், முயிற்சிகளும் விளக்கின் திரியினைத் தூண்டி பிரகாசமாக
ஒளிவிடச் செய்வது போல்தான் எல்லோருக்கும் அம்மாதான் உலகம். என்றாலும் பல
மகான்களின் வாழ்க்கையில் அவர்களின் அம்மா எத்தனை முக்கியத்துவம்
வாய்ந்தவர்களாக இருந்துள்ளார்கள் என்பதனைப் பார்ப்போம்.
ஆதிசங்கரர்: இவரது தாயார் இவர் மீது உயிரையே வைத்திருந்தார். சிறு வயதிலேயே
ஆதிசங்கரர் சன்னியாசம் பெற மிகவும் முனைந்தார். ஆனால் பெற்ற தாயால் அதற்கு
சம்மதம் தர முடியவில்லை. அந்நிலையில் தான் ஆதிசங்கரரின் காலை நதியில் ஒரு
முதலை கவ்விக் கொண்டது. ஓடி வந்த தாயால் ஒன்றும் செய்ய முடியாது பதறினார்.
என் மகனை சந்நியாசம் கொடுத்து விடுகிறேன். அவர் பிழைத்தால் போதும் என
இறைவனை வேண்டினார். உடனே இறைவனின் அருளால் முதலை ஆதி சங்கரரின் காலை விட்டு
விட்டது. ஆயினும் தாயால் தன் மகன் சந்நியாசி ஆனதினை தாங்க முடியவில்லை.
அப்பொழுது ஆதி சங்கரர் தன் தாயிடம் அவரின் கடைசி நேரத்தில் தான் வந்து கூட
இருந்து அவரது ஈமச் சடங்குகளை செய்வதாக வாக்களித்து சென்றார். தன்
ஞானத்தினால் தாயின் இறுதி நேரத்தினை அறிந்து வந்து தாயை சந்தித்தார்.
தாயின் உயிர் பிரிந்த பின் தன் தவ சக்தியால் தாயின் இறுதி சடங்குகளை செய்து
முடித்தார். இறைவனின் அவதாரம் என்று போற்றப்படும் ஆதிசங்கரர் தன் தாய்க்கு
கொடுத்த மதிப்பு உலகத்தினருக்கு சொல்லாமல் சொன்ன அறிவுரை.
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் தாயின் மீது அத்தனை அன்பு கொண்டிருந்தவர்.
சிறு வயதிலிருந்தே ஆன்மீக ஈடுபாடே பரமஹம்சரின் வாழ்க்கை என்றிருந்தாலும்
தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு தன் தாய்க்கு மிகுந்த கவனம் கொடுத்தவர்.
வீட்டு வேலைகளில் கூட அம்மாவுக்கு தினமும் பெரும் உதவி செய்தவர். தன் தாய்
சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக ஆன்மீகப் பாதையில் இருந்தாலும் சாரதாதேவி
அம்மையாரை மணமுடித்தவர்.
சாரதா தேவி அம்மையாரும் பகவான் பரமஹம்சரின் ஆன்மீகப் பாதையிலேயே
வாழ்ந்தார். சுவாமி விவேகானந்தரின் குடும்பம் வசதியாய் வாழ்ந்த குடும்பம்.
அவர் தந்தையின் மறைவிற்குப் பிறகு உறவினர்களால் ஏமாற்றப்பட்டனர். சுவாமி
விவேகானந்தரின் தாய் மிகுந்த கஷ்டத்தோடே குடும்பத்தினை நடத்தினார். சுவாமி
விவேகானந்தர் தன் குரு ராமகிருஷ்ண பரமஹம்சரோடு இருந்தார். பிறகு சந்நியாசம்
எடுத்துக் கொண்டார்.
விவேகானந்தரின் தாயார் புவனேஸ்வரி தேவி அமைதியுடன், உறுதியான மனதுடனும்
குடும்பத்தினை நடத்தி வந்தார். விவேகானந்தருக்கு அவர் தாயின் மீது மிகுந்த
மரியாதை.
‘இந்த உலகில் நான் நேசிப்பது என்ற ஒன்று இருந்தால் அது என் தாய் தான்’
என்று குறிப்பிட்டுள்ளார் விவேகானந்தர். 1900-ல் அவரது உடல்நிலை பற்றி அவரே
அறிந்த பொழுதும் தன் தாயுடன் அவர் விரும்பியபடி காளி கோவில் அவருடன்
சென்று அவரது நேர்த்திக் கடன்களை செய்தார். தாயுடன் அவர் விரும்பிய படி
புனித யாத்திரை சென்றார். ‘என் தாய் என் மீது செலுத்தும் அன்பிற்கு நான்
என்ன செய்தாலும் அது ஈடாகாது’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னைப் பெறுவதற்காக தன் தாய், தந்தையர் எத்தனை புனித விரதங்கள்
இருந்தனர் என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அந்த தாய் விவேகானந்தரின்
மறைவையும் தாங்கி ஆன்மீகப் பயணத்தில் வாழ்ந்த மாதேவதை.
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கையினை அறியாதவர் இருக்க முடியாது. அவரது
அன்னை புட்லி பாய் அவரை வளர்த்த விதமே அவரை மகாத்மா ஆக்கியது எனலாம்.
சத்ரபதி சிவாஜி ராஜாவினுடைய தாயார் ஜிஜாபாய் மிகவும் ஆன்மீக பற்று உடையவர்.
சிவாஜியின் சிறு வயதில் பல திகாசங்களையும், புராணங்களையும் கூறி
வளர்த்தவர். இதுவே சிவாஜியை பிற்காலத்தில் மாவீரனாக்கியது.
பகவான் ரமணர் தன் அன்னையை அருகில் வைத்திருந்ததுடன் அவர் காலத்திற்குப்
பின் அவரது மறு பிறப்புகளை நீக்கி தான் இருக்கும் இடத்திலேயே அன்னைக்கு
சமாதி அமைத்தார். அதன் அருகிலேயே பகவான் ரமணரின் ஜீவ சமாதியும்
அமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் வயது இருபதோ, நாற்பதோ, அறுபதோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
கீழே கூறப்பட்டுள்ளவைகளை என் அம்மா என்று சொல்லி படித்துப் பாருங்கள்,
அப்படியே பொருந்தும். இது எந்த காலத்திற்கும் மாறாதது. அது அந்த
வார்த்தைக்கான மகிமை.
என் அம்மா
* தான் நான் என்ன அபத்தமாய் நடந்து கொண்டாலும் என்னை பொறுத்துக்குவாங்க.
* இப்பவும் என்னை ‘குழந்தை’ என்றே நினைப்பாங்க.
* அம்மாவின் உண்மையான கோபம் அபூர்வம்.
* எங்க அம்மா மாதிரி சூப்பரா சமைக்க யாராலும் முடியாது. எங்கம்மா கை வைத்தியமே போதும். டக்கென்று எல்லாம் சரியாகி விடும்.
* கொஞ்சம் வீடியோ கேம் ஆசை. (இந்த கால அம்மா) வீட்டு விவகாரம் பூரா அவங்களே சமாளிப்பாங்க.
* திடீர் திடீர்ன்னு பல விஷயங்களில் என்னை ஆச்சரியப்படுத்துவார்.
* எங்கம்மாக்கு ரொம்ப ஞாபக சக்தி.
* எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பாங்க.
* பொறுமையின் சிகரம்
* வீட்டுக்கு வர்ரவங்க எல்லாருக்கும் தாராளமா சாப்பாடு போடுவாங்க.
* நிறைய கதைகள் சொல்லியிருக்காங்க. எத்தனை திறமை இருந்தாலும் தன்னை ஒரு பெரிய ஆளா காட்டிக் கொண்டதே இல்லை.
* அப்பாவை எங்கம்மா மாதிரி யாரும் கவனிச்சுக்க முடியாது.
* எங்க அம்மா ரொம்ப அழகு.
* தன்னை கவனிச்சுக்கவே மாட்டாங்க.
* எங்கம்மா மாதிரி புத்திசாலி பார்க்க முடியாது என்பார்கள்.
ஒரு சிலர் அம்மா, அப்பாவிடம் ஏதோ சண்டை காரணமாக பேசாமல் இருக்கலாம்.
அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்றே அதனை மறந்து விடுங்கள். உடனே சென்று
பேசி விடுங்கள். வாய்ப்பினை நழுவ விடாதீர்கள். அனைவருக்கும் ஒரு
வேண்டுகோள். இன்றாவது அம்மாவிடம் சென்று ‘அம்மா நான் உன்னை மிகவும்
நேசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள்.
அம்மாதான் காலத்திற்கும் உங்களின் ‘பெஸ்ட் பிரெண்ட்’ என்பதனை உணருங்கள்.
இன்னொரு முக்கிய செய்தி.
விதி பல பெண்களை தனியரு மனுஷியாக தன் குழந்தைகளை வளர்க்க வேண்டிய
சூழ்நிலையினை அளித்து விடுகின்றது. காரணம் கணவன் இறந்து இருக்கலாம். அல்லது
குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவியை பிரிந்து இருக்கலாம்.
பிள்ளைகளின் மீதுள்ள அளவு கடந்த பாசத்தினால் பெண்ணே தன் பிள்ளைகளை
வளர்க்கும் பொறுப்பினை தனியே ஏற்கிறாள். கடுமையாய் உழைக்கிறாள். அந்தத்
தாய்மார்களை போற்ற வேண்டியது சமுதாயத்தின் கடமை. அவர்களை கூடுதல்
மரியாதையுடன் அன்னையர் தினத்தன்று போற்றுவோமாக.
இறைவனைக் கூட அன்னை ரூபத்தில் வணங்குவது அநேக நன்மை பயக்கும் என்பர்.
நடமாடும் சக்திகளாக தாய்மார்களை இந்த அன்னையர் தினத்தில் வணங்குவோமாக.
சிலருக்கு அன்னையர் இவ்வுலகில் இல்லாது இருக்கலாம். ஆயினும் இந்த அன்னையர் தினத்தில் அவர்களை நினைத்து நன்றி செலுத்தலாமே.
Thanks Maalaimalar News.
No comments:
Post a Comment
Comment here