Breaking

Thursday, April 14, 2016

கோடை காலத்தில் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாதவையும்

இயற்கை ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் அற்புத பணியை அவ்வப்போது செய்து கொள்ளும். மரங்கள், செடிகள் என அனைத்தும் ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ப மாறி கொள்கின்றன. அதுபோல் மனிதனும் ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப தனது உணவு, உடை, ஆடை, பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் மாற்றம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் கோடை காலத்திற்கு ஏற்ப மனிதன் தனது அன்றாட நடைமுறை வாழ்க்கையில் செய்யத்தக்கவை மற்றும் செய்ய தகாதவை என சில நடைமுறைகள் உள்ளன. அவற்றினை கோடை காலம் தொடங்கும்போது நடைமுறைப்படுத்த எத்தணிக்க வேண்டும்.

ஆடை அணிவதில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை:-

கோடை காலம் ஆரம்பித்தவுடன் ஆடை அணிவதில் பெரிய மாற்றம் செய்திட வேண்டும். நைலான் மற்றும் பாலிஸ்டர் ஆடைகள் அணியவே கூடாது. இறுக்கமாக ஆடைகள் அணிவது கூடாது. அடர்த்தியான சாயங்கொண்ட நிறங்களை பயன்படுத்திட கூடாது. தோல் ஆடைகள், சாட்பீன் போன்ற உறுத்தும் ஆடைகளை அணிதல் கூடாது. கோடையில் நம்மை குளிர்விக்கும் பருத்தி ஆடைகளைதான் அணிதல் வேண்டும். லினன் மற்றும் சணல் இழை ஆடைகள் அணியலாம். தளர்வான, மென்மையான நிறங்களை கொண்ட ஆடைகள் அணியலாம். வெள்ளை நிற ஆடைகள் அதிகம் பலனளிக்கும்.

கோடைகாலத்தில் உடற்பயிற்சியின்போது கவனிக்க வேண்டியவை:-

கோடை காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருக்கும். அதன் காரணமாய் நமது வெளிப்புற பணிகள் அதிகமாக நடைபெற்று உடலில் அதிக கலோரிகள் செலவாகும். மேலும் கோடைகால உடற்பயிற்சி என்பது நீச்சல் கூடங்களில்தான் இருக்கும். நீச்சல் பயிற்சி, அக்வா ஏரோபிக்ஸ், தண்ணீர் ஜாக்கிங், சைக்கிளிங், நடைபயிற்சி, நிழலான இடங்களில் சிறு உடற்பயிற்சிகள், யோகா, பிராணயாமம் போன்றவைகள் செய்யலாம்.

கோடையில் உடற்பயிற்சி செய்ய விரும்புவோர் சூரிய ஒளி அதிகம் படும் இடங்களில் நின்று உடற்பயிற்சி செய்யக் கூடாது. கோடைகாலத்தில் பொதுவாகவே இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். எனவே அதிக கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டாம். அதுபோல் இடைவெளி விடாது உடற்பயிற்சி செய்ய வேண்டாம். உடற்பயிற்சி ஆடைகள் வியர்வை இழுக்காத சிந்தெடிக் ஆடைகளாக இருத்தல் கூடாது.

கோடையில் வெளியே செல்லும்போது செய்யத்தக்கவை:-

பெரும்பாலும் அதிக வெயில் கொளுத்தும் மதியநேர பயணம் தவிர்ப்பது நல்லது. அதற்கேற்ப நமது பணிநேரத்தை மாற்றம் செய்து கொள்ளுதல் வேண்டும். வெளியில் அப்படியே செல்ல நேர்ந்தால் குடை எடுத்து செல்வது நல்லது. தொப்பி அணிந்து செல்லலாம். குளிர்ச்சி தரும் கூலிங்கிளாஸ் அணிந்து செல்ல வேண்டும். உயர் எஸ்.பி.எப். கொண்ட சன்ஸ்கிரீன் லோஷனை முகத்தில் பூசிச்செல்ல வேண்டும். கையில் தண்ணீர் பாட்டில் அவசியம் இருப்பது நல்லது.

வெளியில் செல்லும்போது பிளாஸ்டிக் செருப்புகளை அணிந்து செல்லக்கூடாது. வெயிலில் நின்றுகொண்டு அதிக குளிர்ச்சியான பானங்களை அருந்துதல் கூடாது. அதிக சோர்வுடன் தொடர்ந்து நடந்து செல்லக்கூடாது.

கோடைகாலத்தில் சாலையோரம் விற்கும் உணவுகள் மற்றும் குளிர்பானங்களை தரமானதா என அறியாமல் உண்ணுதல் கூடாது. அதிக கேஸ் கொண்ட குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்திட வேண்டும். கோடைகாலத்திற்கு ஏற்ப நம்மையும் நாம் மாற்றி கொள்ளும்போது கோடையும் ஓர் மகிழ்ச்சியான பருவகாலமே.

No comments:

Post a Comment

Comment here